வேதாரண்யத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கடந்த ஒருமாத காலமாக பெண் இயற்கை ஆர்வலர் ஒருவர் மூலிகை கஞ்சி வழங்கி வருகிறார்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள மணக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் இயற்கை விவசாயி சித்ரா. கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கரியாப்பட்டினம், செங்காதலை உள்ளிட்ட பகுதிகளில், மக்களுக்கு சேவை செய்து வரும் காவலர்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வரும் பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு, கடந்த ஒரு மாத காலமாக தனது சொந்த செலவில் மூலிகை கஞ்சியை தயார் செய்து இருசக்கர வாகனம் மூலம் சென்று கொடுத்து வருகிறார் சித்ரா.
கொரோனா தொற்று பாதிப்பு வராமல் தடுக்க தூதுவளை, மருதம்பட்டை, கரிசலாங்கண்ணி, முசுமுசுக்கை திப்லி, சீரகம், அதிமதுரம், ஆவரம்பூ போன்ற மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட மூலிகை கஞ்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கப்பதற்காக வழங்கப்படுகிறது என்றார்.