செங்கல்பட்டு அருகே பெண் காவலரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர், தற்கொலை செய்து கொண்டதால், பெண் காவலரை கைது செய்யும் வரை சடலத்தை வாங்க மாட்டோம் என, இறந்தவரின் உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
செங்கல்பட்டு மாவட்டம் ஒழலூரைச் சேர்ந்தவர் யுவராஜ். இவர் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இவர், செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த, சங்கீதா என்ற பெண் காவலரை காதலித்து திருமணம் செய்ததாகத் தெரிகிறது. ஆனால் சங்கீதாவிற்கு ஏற்கெனவே மணமாகி, 8 வயதில் மகன் இருந்தது யுவராஜுக்கு தெரியாது.
இதற்கிடையே, சங்கீதாவுக்கு புருஷோத்தமன் என்ற வேறொரு நபருடன் காதல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் யுவராஜுக்கும் சங்கீதாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து, யுவராஜ் தன்னை துன்புறுத்துவதாக, சங்கீதா, செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னதாக புகார் அளித்துள்ளார்.
இதனால், யுவராஜ் பெரும் மனஉளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. யுவராஜ், சங்கீதாவை விட்டுப் பிரிந்து சென்னையில் இருந்து வந்த நிலையில், சங்கீதா வேறு இடத்திற்கு, பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இதனை அறிந்த யுவராஜ் செங்கல்பட்டு வந்துள்ளார். இதனிடையே, நேற்று விஷம் அருந்திய நிலையில், செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே கிடந்த அவரை, மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தும், அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தன் சாவுக்கு காரணம் மனைவி சங்கீதா, அவரது காதலன் புருஷோத்தமன் மற்றும் சங்கீதாவுடன் பணியாற்றிய காவலர்கள் 3 பேரை குறிப்பிட்டு, யுவராஜ் கடிதம் எழுதி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, யுவராஜின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், யுவராஜ் குறிப்பிட்டுள்ள மூவரையும், கைது செய்யும் வரை சடலத்தை பெற மாட்டோம் என்று கூறி, செங்கல்பட்டு மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் செங்கல்பட்டு மதுராந்தகம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.