காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கருப்புச்சட்டை அணிந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்த பெண் இயக்குநர்களின் ஆடைகளை களைய வைத்து காவல்துறையினர் சோதனை நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு சட்டை அணிந்து வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து திரைப்பட உதவி இயக்குநர்கள் சிலர் ஆலந்தூர் செல்ல இன்று காலை முயன்றனர். அனைவரும் கருப்புச் சட்டை அணிந்திந்ததால் அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். விமானநிலையம் சென்று பிரதமருக்கு எதிராக அவர்கள் போராட்டத்தில் ஈடுபடலாம் என்பதால், காவல்துறையினர் உதவி இயக்குநர்களை வடபழனியிலுள்ள திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர்.
அப்போது, கூட்டத்திலிருந்த பெண் உதவி இயக்குநர்களின் ஆடைகளை களைந்து, பல முறை காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அனைவருக்கும் மத்தியில் வைத்து தங்கள் ஆடைகளை களைந்து சோதிக்குமாறு வடபழனி காவல்துறை ஆய்வாளர் சந்துரு கூறியதாகவும் பெண் உதவி இயக்குநர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டதும், வடபழனியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த உதவி இயக்குநர்கள் விடுவிக்கப்பட்டனர். அப்போது, வெளியே வந்து புதிய தலைமுறைக்கு பேட்டி கொடுத்த பெண் இயக்குநர் ஒருவர் காவல்துறையினரின் அத்துமீறலால் ஏற்பட்ட மன உளைச்சலால் வலிப்பு வந்து மயங்கி விழுந்தார். அவருக்கு வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
பெண் உதவி இயக்குநர்களின் குற்றச்சாட்டை வடபழனி காவல்நிலைய உதவி ஆய்வாளர் சண்முகம் மறுத்துள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் ஆயுதம் ஏதேனும் வைத்துள்ளனரா என பெண் போலீசாரை வைத்தே சோதனையிட்டதாகவும், ஆடைகளை களைந்தோ, பெண் உதவி இயக்குநர்களிடம் அத்துமீறியோ காவல்துறையினர் எந்த செயலிலும் ஈடுபடவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.