‘ஒரே மகனை நானே கொன்னுட்டேன்’ - மனமுடைந்து கூறும் தந்தை!

‘ஒரே மகனை நானே கொன்னுட்டேன்’ - மனமுடைந்து கூறும் தந்தை!
‘ஒரே மகனை நானே கொன்னுட்டேன்’ - மனமுடைந்து கூறும் தந்தை!
Published on

மதுரை மாவட்டம் எஸ்எஸ் காலனியில் வசித்து வந்தவர் செளந்திரபாண்டியன். செளபா என நண்பர்களால் அழைக்கப்படும் இவர் பிரபல எழுத்தாளர்களில் ஒருவர். நெப்போலியன் நடித்த ‘சீவலப்பேரி பாண்டி’ திரைப்படம் இவர் எழுதிய கதைதான். இவர் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளிலும் பணிபுரிந்துள்ளார். இவரது மனைவி லதா அரசுக் கல்லூரியில் முதல்வராக பணிபுரிகிறார். குடும்பச் சண்டை காரணமாக பிரிந்து வாழும் இவர்களுக்கு விபின் (27) என்ற மகன் இருந்தார்.

இவர் மது உள்ளிட்ட போதைப் பழக்கங்களுக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. தாய்-தந்தை இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததால், இருவரின் வீட்டிலும் அவ்வப்போது வாழ்வதும், பெரும்பாலும் நண்பர்களுடன் வெளியில் தங்குவதையும் விபின் வழக்கமாக கொண்டிருந்துள்ளார். நண்பர்களுக்கு பணத்தை வாரி செலவழிக்கும் இவர், அந்தப் பணத்தை தனது தாய் தந்தையிடமே பெற்றுள்ளார். குறிப்பாக தனது தந்தை செளபாவிடம்தான் அதிகம் பணத்தை கேட்டு பெற்றுள்ளார். இதனால் மகன் விபின் மீது கடும் அதிர்ப்தியிலும், ஆத்திரத்திலும் செளபா இருந்துள்ளார்.

இருப்பினும் மகன் என்பதால் தனது கோபங்களை கட்டுப்படுத்திக்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் விபின் செலவுக்காக காசு கேட்க, செளபா மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் தந்தை வாங்கி கொடுத்த விலையுயர்ந்த காரை விபின் விற்றுள்ளார். இந்தச் செய்தி தெரிந்தது விபின் மீது செளபா மேலும் ஆத்திரம் அடைந்துள்ளார். காரை விற்ற பணமும் தீர்ந்து போக மேலும் பணம் வேண்டும் என செளபாவிடம் சென்று கேட்டுள்ளார் விபின். அப்போது காரை ஏன்? விற்றாய் என செளபா கேட்க, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் தந்தையை விபின் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதன் பிறகு ஒரு வாரமாக விபினை காணவில்லை.

இந்நிலையில் தனது மகனை நீண்ட நாட்களாக காணவில்லை என விபினின் தாய் லதா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரில் தனது மகன் மீது, தனது கணவர் ஆத்திரத்துடன் இருந்ததையும் தெரிவித்துள்ளார். இதனால் செளபாவிடம் காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் செளபாவின் பதில்கள் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட, கிடுக்கிப்பிடி கேள்விகளை அடுக்கியுள்ளனர். இதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.

அதன்படி காவல்துறையினரிடம் செளபா அளித்த வாக்குமூலத்தில், ‘ஒரே மகன் அவன். போதைப் பழக்கத்தால் சீரழிஞ்சுட்டான். அவன் தொல்லை தாங்க முடியல. அதுனால என் ஓரே மகன நானே கொன்னுட்டேன். சுத்தியால அடித்ததும் அவன் மயங்கி விழுந்து இறந்துட்டான். அப்புறம் திண்டுக்கல்ல இருக்க என் தோட்டத்து வீட்டுல அவன் உடலை புதைச்சுட்டேன்’ என்று கூறியுள்ளார். அவருக்கு கணேசன் மற்றும் பூமி என்ற இரு நண்பர்கள் உடலை புதைக்க உதவியுள்ளனர். இதையடுத்து செளபாவை கைது செய்துள்ள காவல்துறையினர், அவரின் நண்பர்களான கணேசன் மற்றும் பூமியையும் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட மேற்கட்ட விசாரணைகள் தொடர்ந்து வருகின்றன. இதற்கிடையே செளபாவை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com