நாமக்கல்லில் தனது 2 குழந்தைகளையும் மலை மீது இருந்து வீசிக் கொலை செய்த தந்தையை குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் அரசம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி - பாக்கியம் தம்பதியினருக்கு கிரிதாஸ் என்ற மகனும் (8), கவிதாரணி என்ற மகளும் (5) இருந்தனர். தனது மனைவி பாக்கியத்துடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சிரஞ்சீவி, கடந்த நவம்பர் மாதம் செம்மேடு சீக்குபாறை பகுதியில் அமைந்துள்ள ‘வியூ பாயிண்ட்’ மீது ஏறி, தனது இரு குழந்தைகளையும் சுமார் 250 அடி பள்ளத்தில் தூக்கி வீசி கொலை செய்தார். குழந்தைகள் காணாமல் போனதைத் தொடர்ந்து, கணவனின் நடத்தையில் சந்தேகமடைந்த மனைவி பாக்கியம் கொல்லிமலை வாழவந்தி நாடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், சிரஞ்சீவியை விசாரித்து உண்மையை கண்டறிந்தனர். பின்னர் அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் உதவியுடன் போலீஸார் குழந்தைகளின் சடலத்தை மீட்டனர். அத்துடன் சிரஞ்சீவியை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இரண்டு குழந்தைகளையும் கொலை செய்த சிரஞ்சீவியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசுவின் பரிந்துரையின் படி, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் மெகராஜ் உத்தரவிட்டார். அதன்படி, சேலம் மத்திய சிறையில் உள்ள சிரஞ்சீவியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.