ஈரோடு: மாற்று சமூகத்தை சேர்ந்த மருமகன் மீது வேனை ஏற்றிக் கொல்ல முயன்ற மாமனார்- மருமகனின் தங்கை பலி

மருமகன் மீது வாகனத்தை ஏற்றி கொல்ல முயன்ற மாமனார் மாமியாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Subash
Subashpt desk
Published on

செய்தியாளர்: டி.சாம்ராஜ்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள எரங்காட்டூர் குருவாயூரப்பன் நகரைச் சேர்ந்த சுபாஷ், தனது தங்கை ஹாசினியை பள்ளியில் விடுவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது இவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது, பின்புறம் அதிவேகமாக வந்த பிக்அப் வேன் மோதியுள்ளது. இதில் அண்ணன் தங்கை இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். தலையில் பலத்த காயமடைந்த ஹாசினிக்கு சத்தியமங்கலத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பரிதாபமாக உயிரிழந்தார். சுபாஷ் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் டிஎஸ்பி சரவணன் தலைமையில், பவானிசாகர் இன்ஸ்பெக்டர் அன்னம் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து காவல்துறை தரப்பில் கூறும்போது... மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுபாஷ், சத்தியமங்கலம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரது மகள் மஞ்சு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சந்திரன் இவர்களது காதல் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

Police station
Police stationpt desk

இதற்கிடையே சந்திரன் தனது மகளை காதல் திருமணம் செய்த சுபாஷை கொலை செய்யும் நோக்கத்தோடு, நேற்று காலை சுபாஷ் தனது தங்கையுடன் சென்ற வாகனத்தின் மீது பிக்அப் வேனை மோதச் செய்து, சுபாஷை கொலை செய்ய சந்திரன் முயற்சித்தது தெரியவந்துள்ளது.

சந்திரன் மற்றம் அவரது மனைவி சித்ரா ஆகிய இருவரும் தலைமறைவாகி உள்ளதால் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் நேற்றிரவு சந்திரனுக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் புகுந்த மர்ம நபர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கார், இரண்டு இருசக்கர வாகனங்களை தீ வைத்து கொளுத்தினர்.

இது குறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி சேதமடைந்தது. இதற்கிடையே 50க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com