பாளையங்கோட்டை ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தனது தந்தை இறந்த போதிலும் நாட்டிற்கான தனது கடமையைச் செய்வதில் தவறவில்லை என்பதை அறிந்த அதிகாரிகள் அனைவரும் வியப்புற்றனர்.
நாடு முழுவதும் 74 வது ஆண்டு சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் இன்று நடந்த சுதந்திர தின நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த அணிவகுப்பை தலைமையேற்று நடத்தியது ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி.
மகேஸ்வரி அவர்களின் தந்தை நாராயணசுவாமி ( வயது 83 ) நேற்று இரவு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு அவர் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை புறப்பட இருந்தார். ஆனால் திடீரென்று சுதந்திர தின நிகழ்ச்சியில் மாற்றம் செய்ய முடியாது என்ற சூழல் ஏற்பட்டதால், அவர் இன்று காலை 8 மணிக்கு நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் அணிவகுப்பு மரியாதையை நடத்தினார்.
அணி வகுப்பை முடித்த மகேஸ்வரி உடனடியாக தனது தந்தை துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றார். எந்த வகையிலும் குறைவின்றி அணிவகுப்பு நிகழ்த்திய பிறகுதான் அனைவருக்கும் இந்த செய்தி தெரிந்தது. அணிவகுப்பு முடிந்த பின்னர் அனைவரும் அவருக்கு ஆறுதல் அனுப்பி வழியனுப்பினர்.