அரூர் அருகே பாடிவேட்டை முயல் விடும் பாரம்பரிய திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த குடுமியாம்பட்டி கிராமத்தில் மாட்டுப் பொங்கல் முடிந்த பிறகு, கரிநாளுக்கு அடுத்த நாள் ஒவ்வொரு ஆண்டும் தங்களுடைய முன்னோர்களின் வாழ்க்கை முறையை நினைவு கூறும் வகையில் முயல் விடும் பாரம்பரிய திருவிழா நடந்து வருவது வழக்கம். பொங்கல் விழாவில் அனைத்து கிராமங்களிலும் எருதுவிடும் விழா நடைபெறும். அதற்கு மாறாக குடுமியாம்பட்டியில் முயல் விடும் பாரம்பரிய திருவிழா நடைபெறுகிறது.
அந்த வகையில் முயல் விடுவதற்காக அந்த கிராமத்தில் உள்ள மக்கள் அருள்மிகு மாரியம்மன் கோவிலுக்கு வழிபாடு நடத்திவிட்டு,அந்த பகுதியை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மக்கள் அருகிலுள்ள வனப்பகுதிக்கு சென்று ஒரே நாளில் முயலை வலை வைத்து பிடித்து வந்தனர். தொடர்ந்து மாலை 5 மணிக்கு குடுமியாம்பட்டியில் அருள்மிகு மாரியம்மன் கோவில் வளாகத்தில் பெண்கள் சங்கராண்டி பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
இதனை தொடர்ந்து 100 ஆண்டு பழமை வாய்ந்த ஆல மரம் அமைந்துள்ள வளாகத்தில் அச்சல்வாடி, ஒடசல்பட்டி, குடுமியாம்பட்டி கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒன்று கூடி மாரியம்மன் வேடியப்பன் சுவாமிகளை ஊர்வலமாக எடுத்து வந்து, பிடித்து வந்த முயலை மக்களின் பார்வைக்கு காட்டி அதன்பிறகு முயலை எடுத்து, சுவாமிகளை சுற்றி வந்து இறுதியாக முயலை, ஒரு கரும்பு தோட்டத்தில் தரையில் விட்டனர்.அப்போது அந்த முயல் துள்ளி குதித்து தப்பி அருகிலுள்ள வயல்களில் ஓடியது.
தொடர்ந்து இந்த முயல் விடும் விழாவை அந்த பகுதியில் உள்ள பல்வேறு கிராமத்தை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பார்த்து ரசித்தனர். இந்த முயல் விடும் திருவிழா குடுமியாம்பட்டி கிராமத்தில் பல்லாண்டு காலமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.