முல்லைப் பெரியாறு அணையில் இருந்து மேலூர் ஒருபோக பாசனத்திற்கு செப்டம்பர் 15-ஆம் தேதி அணையில் 6000 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருக்கும்பட்சத்தில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனிடைய தற்போது அணையில் 135 அடி தண்ணீர் இருப்பதால் மேலூர் ஒருபோக பாசத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கடந்து சில நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், போராட்டம் நடத்தியதை அடுத்து இரண்டு நாட்களில் தண்ணீர் தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த அதிகாரிகள், அதன் பின்னர் அதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருப்பதை கண்டித்தும், அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் தங்களது விவசாயம் கேள்விக்குறியாகி உள்ளதாக குற்றம்சாட்டிய விவசாயிகள் இன்று மேலூர் பென்னிகுயிக் பேருந்து நிலையம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில், பெண்கள் உட்பட 2000-க்கும் மேற்பட்ட விவசாயிகளும், இவர்களுக்கு ஆதரவாக. வணிகர் சங்கம், வழக்கறிஞர்கள், நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் உள்ளிட்டோரும் பங்கேற்று பேசினர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் வெள்ளலூர், உறங்கான்ட்டி, கோட்டநத்தம்பட்டி, பழையூர்பட்டி, எட்டிமங்கலம், மேலவளவு, தும்பைபட்டி உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் பங்கேற்றனர். இந்த போராட்டம் தொடர்பாக விவசாயிகள் நம்மிடம் பேசும்போது....
முருகன் (மேலூர் ஒருபோக பாசன சங்கத் தலைவர்)
"கடந்த ஒருமாச காலமாக பெரியார் ஒருபோக பகுதிக்கு தண்ணி கேட்டு அதிகாரிகளிடம் மனு கொடுத்திருக்கோம். எவ்வளவோ போராட்டங்கள் பண்ணிட்டோம். எங்களை கூப்பிட்டு பேச்சுவார்தை கூட நடத்தல. பல போராட்டங்கள் நடத்தியும் தமிழக அரசு எங்களது கோரிக்கையை கண்டுகொள்ளாமல் இருக்கு. அதனால் இன்று உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறோம்" என்றார்.
மற்றொரு விவசாயி நம்மிடம் பேசியபோது... இது தொடர்பான நடவடிக்கைகள் 24.10.23 முதல் தொடர்ந்து நடைபெற்ற வருகிறது. அதன் பிறகு 09.11.23-ல் பெரிய போராட்டம் நடத்தினோம். அதன் பிறகு 27.11.23-ல் பெரிய பேரணி நடத்தினோம். அதேபோல உள்ளிருப்பு போராட்டமும் நடத்தினோம். ஆனால், எந்த போராட்டத்திற்கும் அரசு செவிசாய்த்து எந்தவித நியாயமான நடவடிக்கையும் எடுக்கல. அரசாணை 122-ன் படி இரு போகத்துக்கும், ஒரு போகத்துக்கும் இருக்கும் உரிமை ஒரே மாதிரியான உரிமை. இரு போகத்துக்கு மட்டும் கொடுத்துட்டு போதுமான தண்ணீர் இருப்பு இருந்தும் எங்களுக்கு தண்ணீர் தர மறுப்பது நியாயமே இல்லை.
தண்ணீர் கிடைக்கும் வரை இது மாதிரியான போராட்டங்கள் தொடரும். எங்களது நியாயமான கோரிக்கையை ஏற்று அரசு தண்ணீர் திறக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் என்றார்.