காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சி காவிரி ஆற்று மணலில் புதைந்து தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நூதன போராட்டம் நடைபெற்றது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திருச்சியில் உள்ள காவிரி மணல் ஆற்றில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மணலில் புதைந்து நூதன போராட்டம் நடைபெற்றது.
தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில், சங்கத்தின் பிரதிநிதிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை எழுப்பினர். இதையடுத்து அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.