தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை, 6 வழி சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் அருகே விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தின் தச்சூர் முதல் ஆந்திராவின் சித்தூர் வரை சுமார் 116 கி.மீ. தூரம் வரை, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் 1800 ஏக்கர் நிலங்கள் கையைப்படுத்தப்பட்டு, 6 வழி சாலை போடப்பட உள்ளது. அதற்காக 1,238 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. அவற்றில் ஊத்துக்கோட்டை வட்டத்தில் 30 கி.மீ., பள்ளிப்பட்டு வட்டத்தில் 16 கி.மீ., ஆந்திராவின் சித்தூரில் 70 கி.மீ. என மொத்தமாக 116 கி.மீ. தூரம் வரை இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகறது.
கடந்த 2 ஆண்டுகளாக விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், இன்று திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் அருகே விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆரணி ஆறு மற்றும் கொசஸ்தலை ஆறுகளின் அருகில் உள்ள நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால், 3 போகம் விளையும் நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், 3 போகம் விளையும் நிலங்களை கையகப்படுத்த கூடாது என சட்டம் இருப்பதாகவும், இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கூறி போராட்டம் நடந்து வருகிறது.
நிலம் கையப்படுத்தப்பட்டால் 1238 ஏக்கர் விவசாய நிலங்களும், 774 விவசாய குடும்பங்களும், 2847 விவசாயம் சார்ந்த குடும்பங்கள் மறைமுகமாக பாதிக்கப்படுவதாகவும், 105 கிணறுகள், 309 போர்வெல், 10 குளங்கள், 355 மின்சார இணைப்பு 32 பம்ப் செட், 21 வீடுகள், 6342 மரங்கள் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.