நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் சேரும் மகளின் மேல் படிப்பிற்கு அரசு உதவ வேண்டும் என ஏழை விவசாயி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அடுத்த பானாமூப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சன்னாசி. ஏழை விவசாயியான இவரது மகள் தங்க பேச்சி, விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் கடந்தாண்டு பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.
இதைத் தொடர்ந்து மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதினார். அதில் வெற்றி பெற்று கலந்தாய்வில் தனியார் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்ததால் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் கல்வியை தொடர முடியவில்லை.
இந்நிலையில் இந்த ஆண்டு தனியார் பயிற்சி வகுப்பிற்குச் சென்ற அவர், நீட் தேர்வில் 256 மதிப்பெண் பெற்று அரசு ஒதுக்கீட்டில் கன்னியாகுமரி மாவட்டம் மூகாம்பிகை மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. அரசு கல்விக் கட்டணத்தை மட்டும் செலுத்தி விடுவதாக கூறியுள்ளது.
ஆனால் தங்கும் விடுதி உட்பட இதர செலவினங்களுக்காக எந்த ஒரு பொருளாதார சூழ்நிலையும் இல்லாத நிலையில் உள்ளதால் தமிழக அரசு அல்லது சமூக ஆர்வலர்கள் உதவ வேண்டுமென அரசுக்கு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.