தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே, சோலைப்பூஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன் விவசாயி (35) இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து தன்னுடைய விவசாய நிலத்திலும், வாடகைக்கும் ஓட்டி வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று தமிழரசன் கிடங்காநத்தம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் டிராக்டரில் உழுது கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் பள்ளத்தில் சிக்கி சேற்றில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், டிராக்டருக்கு அடியில் சிக்கிய தமிழரசன் சேற்றுக்குள் புதைந்துள்ளார்.
இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த, சக விவசாயிகள், தங்களுடைய டிராக்டரை கொண்டு வந்து கவிழ்ந்த டிராக்டரை கயிறு மூலமும் இழுக்க முயன்றனர். ஆனால் டிராக்டர் பாதியளவு சேற்றுக்குள் புதைந்ததால் மீட்க முடியவில்லை.
இந்த சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த, தீயணைப்புத் துறையினர், கிராம மக்கள் உதவியுடன் சுமார் 2 மணி நேரம் போராடி டிராக்டரை அப்புறப்படுத்தி சேற்றுக்குள் புதைந்திருந்த விவசாயி தமிழரசனை மீட்டனர்.
படுகாயமடைந்த தமிழரசனை அருகில் உள்ள மெலட்டூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே தமிழரசன் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். உயிரிழந்த தமிழரசனுக்கு ரேவதி (26) என்ற மனைவியும், நிவாஸ், நிவாசினி என்ற 2 பிள்ளைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.