ஃபோனி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிஷாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபோனி புயல் ருத்ரதாண்டவம் ஆடி ஒடிசாவை புரட்டி போட்டுள்ளது. புயலின் கோரதாண்டவத்தால் ஒடிசாவே உருமாறிக்கிடக்கிறது. அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மீட்புப்பணியில் துரிதம் காட்டி வருகின்றன. ஒடிசா அரசு, புயலை சரியாக கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்ததன் மூலம் உயிர்ச் சேதத்தை பெருமளவு குறைத்துள்ளது. ஃபோனி புயலை சரியாக கையாண்டு உயிர்ச்சேதம் ஏற்படாமல் தடுத்துள்ளதாக இந்தியாவை ஐநாவை சேர்ந்த பேரிடர் மீட்புக் குழு பாராட்டியுள்ளது.
இந்நிலையில் ஃபோனி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிஷாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் ஒடிஷாவில் புயல் மற்றும் மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள முதலமைச்சர் பழனிசாமி, ஒடிஷா அரசுக்கு எந்தவித உதவியும் வழங்க தமிழக அரசு தயாராக இருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.