ஃபோனி புயல் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கும் முன்னேற்பாடாக சென்னை எழும்பூர் ரயில்வே அலுவலகத்தில் 2 குழுக்களும், அரக்கோணத்தில் 12 குழுக்களும் தயார் நிலையில் உள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான ஃபோனி புயலானது, அதிதீவிர புயலாக வலுப்பெற்று தற்போது சென்னைக்கு வடகிழக்கே 470 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இந்த ஃபோனி புயலானது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா மாநிலத்தின் பூரி பகுதியில் கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே வங்கக்கடல் பகுதியில் 30 முதல் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஃபோனி புயல் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கும் முன்னேற்பாடாக 5 மாநிலங்களில் 47 குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக தேசிய பேரிடர் மீட்புப் படை தெரிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் 6 குழுக்களும், ஒடிசாவில் 25 குழுக்களும், ஆந்திராவில் 12 குழுக்களும், சென்னை எழும்பூர் ரயில்வே அலுவலகத்தில் 2 குழுக்களும், கேரளாவில் 2 குழுக்களும் தயார் நிலையில் இருப்பதாக தேசிய பேரிடர் மீட்புப் படை தெரிவித்துள்ளது. இதுதவிர தேவைப்பட்டால் எந்த இடத்திற்கும் சென்று உதவுவதற்காக 12 குழுக்கள் அரக்கோணத்தில் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.