நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளி வருகிறது. இதையடுத்து, கள்ளக்குறிச்சியில் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் பரணி பாலாஜி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், கள்ளக்குறிச்சியில் உள்ள லேனா திரையரங்கிற்குச் சென்றனர். இந்நிலையில், லியோ திரைப்படத்தின் ரசிகர் மன்ற சிறப்புக் காட்சியை வெளியிடுமாறு திரையரங்க உரிமையாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அப்போது, லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது, ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர் மன்ற சிறப்புக் காட்சி திரையிட்டதைப் போல, லியோ திரைப்படத்திற்கும் ரசிகர் மன்ற சிறப்புக் காட்சியை திரையிட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து பேசிய விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட தலைவர் பரணி பாலாஜி கூறுகையில், “திரையுலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் விஜய். அவர் நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் என்றாலே அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும். அதிலும் குறிப்பாக, விஜய் படத்தின் ஆடியோ லான்ச் என்றாலே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். இந்நிலையில், லியோ படத்தின் ஆடியோ லான்ச் கேன்சல் செய்யப்பட்டதாக, படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்த அறிவிப்பு திரைத்துறை மட்டுமல்ல, விஜய் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. இதையடுத்து, ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் லியோ திரைப்படத்தின் ரசிகர் மன்ற சிறப்புக் காட்சி வெளியிட வேண்டும் என வலியுறுத்தி, நாங்கள் திரையரங்க உரிமையாளர்களிடம் மனு அளித்துள்ளோம். எனவே, ரசிகர் மன்ற சிறப்புக் காட்சியை திரையிட தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.