புரெவி புயல் எதிரொலியாக சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு செல்லும் சாலைகள் பேரிகார்டு கொண்டு மூடப்பட்டது. இதனால் கன்னியாகுமரியே வெறிச்சோடி காணப்படுகிறது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும், தென் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து குமரி மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரிக்கு 20 பேர் கொண்ட பேரிடர் மீட்புக் குழுவினர் இன்று காலை அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு செல்லும் சாலைகள் பேரிகார்டு கொண்டு அடைக்கப்பட்டு, இங்குவரும் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இதனால் சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.