5 மணி நேரம் தனியாக பேசிவிட்டு சென்ற மணமகன்.. திருமணம் நிச்சயமான பெண் எடுத்த விபரீத முடிவு

5 மணி நேரம் தனியாக பேசிவிட்டு சென்ற மணமகன்.. திருமணம் நிச்சயமான பெண் எடுத்த விபரீத முடிவு
5 மணி நேரம் தனியாக பேசிவிட்டு சென்ற மணமகன்.. திருமணம் நிச்சயமான பெண் எடுத்த விபரீத முடிவு
Published on

தாராபுரம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலையில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் அரசு மருத்துவமனை முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள பெல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால். இவர் விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் ரம்யா (23) தனியார் பனியன் கம்பெனியில் வேலைசெய்து வருகிறார். இவருக்கும் பக்கத்து கிராமத்தைச் சார்ந்த பணப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சின்ராசு(25) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகின்ற 29ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில், ரம்யாவின் பெற்றோர் திருமண அழைப்பிதழ்களை உறவினர்களுக்கு கொடுக்க வெளியூர் சென்றுள்ளனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த ரம்யாவிடம் நிச்சயக்கப்பட்ட மணமகன் சின்ராசு சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக அவர்களது வீட்டுக்குள் உடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் நேற்று மாலை சின்ராசு ரம்யா வீட்டிலிருந்து கிளம்பிய பின் வெகுநேரமாகியும் ரம்யா தனது வீட்டைவிட்டு வெளியே வராத காரணத்தினால் அக்கம்பக்கத்தினர் ரம்யா வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் ரம்யா மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் உடலைக் கைப்பற்றிய குண்டடம் காவல்துறையினர் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் ரம்யாவின் உறவினர்கள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பிரேத பரிசோதனை முடிந்த பின் உடலை வாங்க மறுத்து தாராபுரம் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ரம்யாவின் வீட்டுக்கு வந்து சென்ற சின்ராசுவிடம் விசாரணை நடத்தி கைதுசெய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் கோஷமிட்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த குண்டடம் மற்றும் தாராபுரம் போலீசார் கிராம மக்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறி சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் தாங்கள் சந்தேகப்படும் நிச்சயிக்கப்பட்ட மணமகன் சின்ராசு நேரில் வந்து விசாரணைக்கு தன்னை ஆஜர்படுத்தி கொள்ளாவிட்டால் உடலை வாங்க மாட்டோம் என அரசு மருத்துவமனை முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிராம மக்களின் போராட்டத்தால் தாராபுரத்தில் மூன்று மணி நேரமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com