திடீர் தீ விபத்தால் ஒரே நாளில் சிதைந்த குடும்பம்.. செய்வதறியாது நின்ற மகன்கள்! கிருஷ்ணகிரியில் சோகம்
கிருஷ்ணகிரி பழைய பேட்டை நேதாஜி சாலையில் பட்டாசு கிடங்கு வைத்து பட்டாசுகள் விற்பனை செய்து வருபவர் ரவி (46), இவருடைய மனைவியின் பெயர் ஜெயஸ்ரீ (40). இத்தம்பதிக்கு ரித்திகா (19) என்ற மகளும், ருத்தீஷ் (21), ருத்ரா (22), ருத்திக் (17), என 3 மகன்களும் உள்ளனர்.
இதில் பெரிய மகன் ருத்ரா +2 முடித்துவிட்டு தன் தந்தையுடன் சேர்ந்து பட்டாசு கடையை பார்த்து வந்துள்ளார். ருத்தீஷ் (21) கடந்த ஆண்டு கல்லூரியில் படிப்பு முடித்துள்ளார். இளைய மகன் ருத்திக் (17) கல்லூரில் படித்து வருகிறார். மகள் ரித்திகா திருமணமானவர்.
நேற்று காலை வழக்கம் போல் ரவி, அவர் மனைவி ஜெயஸ்ரீ, மகள் ரித்திகா, மகன் ருத்தீஷ் ஆகியோர் பட்டாசு கடைக்கு சென்று வேலைகளை செய்து கொண்டிருந்துள்ளனர். மகன்கள் ருத்ரா மற்றும் ருத்திக் இருவரும் வீட்டில் இருந்துள்ளனர்.
அப்போது பட்டாசு குடோனில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ரவி, ரித்திகா, ருத்தீஷ் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ரவியின் மனைவி ஜெயஸ்ரீ படுகாயங்களுடன் அரசு மருத்துவ கல்லூரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவல் அறிந்து மருத்துவ கல்லூரிக்கு விரைந்து சென்ற ரவியின் மூத்த மகன் ருத்ரா, இளைய மகன் ருத்திக் மற்றும் அவர்களுடைய உறவினர்கள், நண்பர்கள் பிணவறை முன்பு வேதனையோடு அழுதபடி நின்றிருந்தனர்.
ஒரே நேரத்தில் தந்தை, சகோதரர், சகோதரி ஆகிய மூன்று பேரையும் பறிகொடுத்த ருத்ரா மற்றும் ருத்திக்கின் நிலை காண்போரையும் கலங்க வைத்தது. அம்மாவையும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதித்துவிட்டு, செய்வதறியாமல் அவர்கள் கண்ணீருடன் கலங்கி நின்றது அங்கு இருந்தவர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
இச்சம்பவம் குறித்து குடும்பத்தினரின் உறவினர் கூறுகையில், “ரவி, லைசன்ஸ் எடுத்துதான் கடை நடத்தி வந்தார். பக்கத்தில் இருந்த கடையில் சிலிண்டர் கசிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அது பக்கத்து கடைக்கும் வந்துவிட்டது” என்கிறார் அழுது கொண்டே.