மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவரின் உடலை கொண்டு செல்ல வாகனம் தராததால் குடும்பத்தினரே சுமந்து சென்ற அவலம் ஒடிஷாவில் நிகழ்ந்துள்ளது.
ஒடிஷா மாநிலத்தின் கலாஹந்தி மாவட்டத்தில் உள்ள குருபூர் கிராமத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த திங்கட்கிழமை நிகிடி மஜ்ஹி என்பவர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டார். தீவிர காய்ச்சலால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இறந்தவரின் உடலை கொண்டு செல்ல குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் அல்லது அமரர் ஊர்தி வாகனம் கேட்டுள்ளனர். அப்போது மருத்துவமனை நிர்வாகம் வாகனம் தர மறுத்துவிட்டதாக தெரிகிறது.
இதனால் வேறு வழியின்றி கொம்பில் ஒரு துணியை கட்டிக்கொண்டு, இறந்தவரின் உடலை அவரது குடும்பத்தினரே சுமந்து சென்றனர். இந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில் விளக்கமளித்துள்ள மருத்துவ அதிகாரி, தனியார் நிறுவனம் நோயாளிகளை காலை ஒன்பது மணிக்கு கொண்டு செல்லும். ஆனால் அவர் பிற்பகல் 1.45 இறந்தார். அந்த நேரத்தில் வாகனம் எதுவும் கிடைக்கவில்லை. அதனால் வேறு வழியின்றி வாகனம் தர இயலவில்லை என தெரிவித்துள்ளார். அரசு சார்பில் மகாபிரயாண என்ற இறந்தோர் உடலை கொண்டு செல்லும் வாகன திட்டம் ஒடிஷாவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.