வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ: பாஜக பிரமுகருக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு

வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ: பாஜக பிரமுகருக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு
வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ: பாஜக பிரமுகருக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு
Published on

தமிழகத்தில் பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல் வீடியோ வெளியிட்ட டெல்லி பாஜக பிரமுகருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்து, வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

டெல்லி பாஜக முக்கிய பிரமுகராக உள்ள பிரசாந்த் குமார் உமாராவ் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 3 ஆம் தேதி பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்படுவது போன்ற வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஃபார்வேர்ட் செய்ததோடு, பீகார் மற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழகம் பாதுகாப்பான இடம் இல்லை எனவும் பதிவேற்றம் செய்திருந்தார்.

இந்நிலையில் இவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி மனு ஒன்றை பிரசாந்த் குமார் உமாராவ் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 'இந்த வீடியோ, நான் தயாரித்தது இல்லை. வந்த தகவலை மீண்டும் ஃபார்வேர்ட்டு செய்தேன். இதில் எந்த உட்கருத்தும் இல்லை, நான் அரசியல் கட்சியில் உள்ளதால் பழிவாங்கும் நோக்கோடு என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்'என கூறியிருந்தார்..

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'மனுதாரர் திட்டமிட்டு தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்று இது போன்ற வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார். இதனால் தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவிலும் ஒரு பதட்டமான சூழல் நிலவியது. எனவே இவரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். ஆகையால் முன் ஜாமீன் வழங்கக் கூடாது' என ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, ' இந்த வீடியோவால் தமிழகத்தில் பிற மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது போல் சித்தரிக்கபட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மிகப்பெரிய சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படுவது போன்ற பதட்டமான சூழலும் நிலவியது’ என கண்டனம் தெரிவித்த நீதிபதி, மனுதாரருக்கு முன் ஜாமீன் வழங்கவும் மறுத்துவிட்டார். அத்துடன் இந்த மனு குறித்து காவல்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com