திருவாரூரில் உயிரிழந்த பெண்ணுக்கு போலியாக சிகிச்சை அளித்த தனியார், அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் வேலுக்குடியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி ஜெயபாரதி. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 5 வயதில் ஒரு ஆண் குழந்தை ஒன்று உள்ள நிலையில் ஜெயபாரதி இரண்டாவது முறையாக கர்ப்பமடைந்தார். கர்ப்பமடைந்த காலத்திலிருந்து திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள தனியார் மருத்துவமணையில் தொடர்ச்சியாக மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். பின்னர் அதே மருத்துவமனையில் கடந்த 16ம் தேதியன்று மாலை பிரசவத்துக்காக சேர்ந்தார். உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. ஆனால் ஜெயபாரதி ஆபத்தான நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். உடனடியாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சையளிக்க வேண்டும் என்றனர்.
உடனே ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக அன்றைய தினம் நள்ளிரவு 12 மணிக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் அறிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பாலசுப்பிரமணியன் மற்றும் உறவினர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றும்போதே ஜெயபாரதி உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் உயிரிழந்த ஜெயபாரதிக்கு தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையளித்ததால் உயிரிழந்ததாகவும் இதனை மறைக்க தனியார் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் இணைந்து உயிரிழந்த ஜெயபாரதியின் உடலுக்கு சிகிச்சையளிப்பது போல உண்மையை மறைத்துள்ளதாகவும் கூறி திருவாரூர் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
இது குறித்து சந்தேக மரணம் எனக் கூறி வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் தவறான சிகிச்சையளித்தது குறித்தும் உயிரிழந்த பெண்மணிக்கு சிகிச்சையளித்த அரசு மருத்துவர்கள், தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே கடந்த 17ம் தேதியன்று திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஜெயபாரதியின் உடல் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டு அன்றைய தினமே அடக்கம் செய்யப்பட்டது. மேலும் இந்த ஜெயபாரதியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டபோது அதனை வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரமணா திரைப்பட பானியில் உயிரிழந்த பெண்ணுக்கு 6மணி நேரம் சிகிச்சையளித்த தனியார், அரசு மருத்துவர்கள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் எழுந்துள்ளது.