தன்னை வருவாய் ஆய்வாளர் எனக்கூறி விபத்துக்குள்ளானவர்களின் குடும்பத்தை ஏமாற்றி பணம் பறித்து வந்த மோசடி நபர் ஒரு விபத்தினால் போலீஸில் சிக்கிய சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.
சேலம் கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் கடந்த சில ஆண்டுகளாக விபத்தில் இறந்தவர்களின் விவரங்களை சேகரித்து, அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து காப்பீடு தொகையை பெற்றுத்தருவதாகக் கூறி, ஏமாற்றி பணம் பறித்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர்மீது சேலம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளது. சேலத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருவதாக போலி அடையாள அட்டை தயார் செய்து மோசடியில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இருப்பினும் பிடிபடாமல் இருந்த நிலையில் மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது கீழே விழுந்து அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அப்போது சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரித்தபோது இவர்மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக சேலம் டவுன் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறிய காயம் இருக்கும் நிலையில் மயக்கத்தில் இருப்பதுபோல் நடித்துவருவதால் சேலம் மத்திய சிறையில் உள்ள மருத்துவமனையில் பாதுகாப்பு அறையில் அடைத்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.