கன்னியாகுமரியில் நகராட்சி ஊழியர்கள் எனக்கூறி, வீடு புகுந்து இருவர் நகைகளை கொள்ளையடித்தாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பழைய ஸ்டேட் வங்கி காலனியில் வசித்து வருபவர் மகாதேவ ஐயர். இவர் மும்பை ஸ்டேட் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின் சொந்த ஊரான நாகர்கோவிலில் மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். மகன், மகள்கள் வெளி ஊரில் உள்ளனர். கடந்த மாதம் 29ஆம் தேதி இரண்டு வாலிபர்கள் இவரது வீட்டிற்கு வந்து நகராட்சி ஊழியர்கள் என்று கூறியுள்ளனர். ஒரு வாலிபர் பாதாளச் சாக்கடை பணிக்கு இடம் பார்ப்பதாக கூறி, வீட்டின் பின்புறம் சென்றுள்ளார்.
மற்றொரு வாலிபர் மகாதேவ ஐயர் மற்றும் அவரது மனைவியிடம் நீண்ட நேரம் பேச்சு கொடுத்துவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று மகாதேவ ஐயர் யதார்த்தமாக பீரோவை திறந்து பார்த்த போது, அதிலிருந்த 22 சவரன் தங்க நகைகள் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் நேசமணி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் நகராட்சி ஊழியர்கள் என்று வந்த அடையாளம் தெரியாத நபர்கள், பீரோவை திறந்து 22 பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்து விட்டு சென்றதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.