மதுரையில் கல்லூரி மாணவர்களிடன் கள்ளநோட்டு பிடிபட்ட சம்பவம் பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இரவு வேளையில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது பேருந்து நிலையத்தை சுற்றியும் பணியில் ஈடுபட்டனர். அவ்வழியே அதிகாலை 4 மணியளவில் இருசக்கரவாகனத்தில் வந்த 3 இளைஞர்களை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அவர்கள் 15 ஆயிரம் ரூபாய் அளவுக்கு கள்ள நோட்டுகள் வைத்திருந்தது சோதனையில் தெரியவந்தது.
அவர்கள் பேரையூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கீர்த்திகான், ஈஸ்வரன், மணிகண்டன் என்ற அதிர்ச்சித் தகவல் விசாரணையில் வெளிவந்தது. அவர்களிடம் இருந்து முப்பது ஐநூறு ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பிடிபட்டவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மதுரையைச் சேர்ந்த தமிழ்வாணன் மற்றும் கரிகாலப்பாண்டியன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இந்தக் கும்பலுக்கு கள்ளநோட்டுகள் கிடைத்தது எப்படி? எத்தனை நாட்களாக கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுகின்றனர்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.