காவல்துறை உயரதிகாரிகள் பெயரில் போலி ஃபேஸ்புக்: பணம் கேட்டு ஏமாற்றும் மர்மகும்பல்

காவல்துறை உயரதிகாரிகள் பெயரில் போலி ஃபேஸ்புக்: பணம் கேட்டு ஏமாற்றும் மர்மகும்பல்
காவல்துறை உயரதிகாரிகள் பெயரில் போலி ஃபேஸ்புக்: பணம் கேட்டு ஏமாற்றும் மர்மகும்பல்
Published on

சென்னையில் காவல் துறை உயர் அதிகாரிகளின் பெயர்களில் போலியான ஃபேஸ்புக் முகவரிகள் தொடங்கி அதைபயன்படுத்தி பணம் கேட்டு மர்மகும்பல் ஏமாற்றுவது அம்பலமாகியுள்ளது.

நாட்டில் ஃபேஸ்புக் ஐடி இல்லாதவர்கள் என்று ஒரு குறிப்பிட்ட நபர்களைதான் காணமுடியும் என்ற அளவிற்கு ஃபேஸ்புக் பிரபலமாகியுள்ளது. இதன் மூலம் முகம் தெரியாத நகர்களை கூட நண்பர்களாக்கி கொள்ளும் கலாச்சாரம் நம்மில் பல பேருக்கு இருக்கிறது. இதில் பல பிரபலங்களின் பெயர்களில் போலியாக முகவரியை ஏற்படுத்துவதும், அவ்வப்போது அவற்றை காவல் துறையினர் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதும் வாடிக்கையான ஒன்றுதான்.

ஆனால் காவல்துறை உயர் அதிகாரிகளின் பெயர்களிலேயே போலியான ஃபேஸ்புக் முகவரிகள் தொடங்கி அதைப்பயன்படுத்தி பணம் கேட்டு ஏமாற்றுவது தற்போது அம்பலமாகியுள்ளது. சென்னை தண்டையார்பேட்டை காவல் உதவி ஆணையராக இருப்பவர் ஜூலியஸ் சீசர். இவரது பெயரில் போலியான ஃபேஸ்புக் முகவரியை தொடங்கிய மர்ம நபர், தாம் வறுமையில் வாடுவதாகவும், நண்பர்கள் பணம் கொடுத்து உதவிட வேண்டும் என்றும் மெசஞ்சர் மூலமாக செய்திகள் அனுப்பப்பட்டு வந்துள்ளது.

இதுகுறித்து காவல் உதவி ஆணையர் ஜூலியஸ் சீசருக்கு தகவல் தெரியவர வலைதளங்கள் மூலமாக கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில் “எனது பெயரில் சிலர் தவறான கணக்கை உருவாக்கி பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை நம்பி ஏமாற வேண்டாம். இதுதொடர்பாக விசாரணை செய்து வருகிறோம்.” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது இப்படி இருக்க, மாதவரம் காவல் உதவி ஆணையர் அருள் சந்தோஷ் முத்து என்ற அதிகாரியின் பெயரிலும் போலியான ஃபேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. அதில் நட்பு வட்டத்தில் இணைவோரிடம் பணம் பறிக்கும் முயற்சி நடந்துள்ளது. இது குறித்து தெரிந்து கொண்ட உதவி ஆணையர் அருள் சந்தோஷ் முத்து, பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார்.

தம்முடைய பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு தொடங்கி பணம் பறிக்கும் முயற்சி நடைபெறுவதாகவும், அவற்றை யாரும் நம்ப வேண்டாம் என்றும், தன்னுடைய அசல் ஃபேஸ்புக்கில் அவர் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com