செய்தியாளர் - இரா.சரவணபாபு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை கண்ணார்பாளையம் சாலையில், ஒருவர் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு அலோபதி மருத்துவம் பார்த்து வருவதாக கோவை மாவட்ட சுகாதாரப்பணிகள் துறை இணை இயக்குநர் டாக்டர்.ராஜசேகரனுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சுகாதாரப்பணிகள்துறை இணை இயக்குநர் டாக்டர்.ராஜசேகரன், பெரியநாயக்கன்பாளையம் முதன்மை மருத்துவர் டாக்டர்.சேரலாதன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் சம்பந்தப்பட்ட கிளினிக்கில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அங்கிருந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த தீப் பிஸ்வாஸ் (41) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் பத்தாவது மட்டுமே படித்து விட்டு ஊசி, மருந்து மற்றும் மாத்திரைகளை மருத்துவம் பார்த்து வந்துள்ளார். போதாகுறைக்கு மூலம், பெளத்திரம் உள்ளிட்ட வியாதிகளுக்கு சிறப்பு மருத்துவர் என தன்னை விளம்பரப்படுத்திக்கொண்டு அலோபதி மருத்துவம் பார்த்து வந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த அலோபதி மருந்துகள், ஊசி, மருந்து, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சம்பந்தப்பட்ட கிளினிக்கும் அதிகாரிகளால் மூடி சீல் வைக்கப்பட்டது.
தொடர்ந்து, சம்பவம் குறித்து காரமடை காவல் ஆய்வாளர் ராஜசேகரனிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காரமடை போலீசார், தீப் பிஸ்வாஸை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, 10ம் வகுப்பு மட்டும் படித்துவிட்டு பல ஆண்டுகளாக அலோபதி மருத்துவம் பார்த்த விவகாரம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.