ஓரினச் சேர்க்கைக்கு அழைத்ததாக தனது கணவர் மீது பொய் வழக்கு ஜோடிக்கப்பட்டுள்ளதாக மோகன்ராஜின் மனைவி பரிமளா சேலம் ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
சேலம் மாவட்டம் காக்காபாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் காக்காபாளையம் பகுதியின், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆட்டோ தொழிற்சங்க தலைவராக உள்ளார். இவர் முருகேசன் என்பவரை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்ததாக கடந்த சில தினங்களுக்கு முன் காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனில், மோகன்ராஜ் பெண் ஒருவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்வது போன்ற வீடியோவும், மேலும் அந்த வீடியோவை அவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மோகன்ராஜ் 7 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் ஒரு செய்தி பரவுகிறது. இருப்பினும் இதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்றும் இதுதொடர்பாக பெண்கள் யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை என்றும் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தனது கணவர் மோகன்ராஜ் மீது காவல்துறையினர் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததாக பொய் வழக்கு பதிந்துள்ளதாக அவரது மனைவி ஆட்சியர் புகார் மனு அளித்துள்ளார். தொழில் போட்டி காரணமாக தனது கணவர் மீது பொய்யான புகார் ஜோடிக்கப்பட்டு உள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், இதுகுறித்து ஆர்டிஓ விசாரணை வேண்டுமெனவும் அவர் குடும்பத்துடன் மனு அளித்துள்ளார்.
மேலும் 7 பெண்களை மோகன்ராஜ் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகும் செய்தி முற்றிலும் பொய்யானது எனவும் அவரின் மனைவி கூறியுள்ளார். அதேசமயம் வெளியாகி இருக்கும் வீடியோவில் இருப்பது தனது கணவர் மோகன்ராஜ் என்றும் அவர் கூறியுள்ளார்.