மேலூர் அருகே விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு அரசின் சார்பில் வழங்கப்பட்ட நிவாரண காசோலையில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சின்னகொட்டாம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பரமணியன். விவசாயியான இவர் கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ம் தேதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து இறந்த சுப்பரமணியன் குடும்பத்தினருக்கு முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை வருவாய்த்துறையினர் அவரது மனைவி பொன்னழகுவிடம் வழங்கியுள்ளனர். இதையடுத்து அவர் காசோலையை வங்கியில் மாற்ற முயன்றபோது வங்கியில் இருந்து இந்த காசோலைக்கு பணம் வழங்க மறுத்துள்ளனர். ஏனென்றால் அந்த காசோலை போலியானது என்று தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக சுப்ரமணியனின் மனைவி பொன்னழகு, “எனது கணவர் இறந்த நிலையில், சமூக பாதுகாப்பு திட்ட முதுநிலை வருவாய் ஆய்வாளர் குலாம் உசேன் என்னிடம் பணம் பெற்றுக்கொண்டு ஒரு லட்சத்திற்காக காசோலை வழங்கினார். இதனைத் தொடர்ந்து அதனை சில மாதங்களுக்கு முன் வங்கியில் மாற்ற முயற்சித்தப் போது அது போலியானது என்று வங்கியில் தெரிவித்தனர். இதுதொடர்பாக வருவாய் ஆய்வாளரிடம் நான் கேட்டப்போது, என்னிடமிருந்து பெற்றுக் கொண்ட பணத்தை திரும்ப அளித்து விட்டு காசோலையை பெற்றுக்கொண்டார்.
இதனால் கணவர் இறந்த நிலையில் குடும்ப பராமரிப்பிற்கு பெரிதும் சிரமமாக உள்ளது, இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை செய்து எனக்கு உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என தெரிவித்தார். இதுகுறித்து மேலூர் வட்டாசியர் சிவகாமிநாதனிடம் கேட்ட போது, “இந்த சம்பவம் தொடர்பாக உரிய ஆவணங்களை சரிபார்த்து, சம்பந்தப்பட்டவருக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.