நடைபெற்று முடிந்த தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு பாதியாக குறைந்திருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கிராமப்புறங்கள் சார்ந்த பேரூராட்சிகளில் அதிகமாகவும், சிறு நகரங்கள் அடங்கிய நகராட்சிகளில் சராசரியாகவும் வாக்குகள் பதிவான நிலையில், பெருநகரான சென்னை, தாம்பரம், நெல்லை மாநகராட்சிகளில் மோசமாக பதிவாகியிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், உள்ளாட்சித் தேர்தலின் முக்கியத்துவத்தை மக்கள் அறியாமல் இருப்பதே என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அதே சமயத்தில், அறிந்தவர்களும் கூட அதை உதாசீனப்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தேர்தல் என்றாலே நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் நடப்பது தான் என்ற மனநிலை சென்னைவாசிகளிடையே, அதிலும் படித்தவர்களிடையே உள்ளதாக கூறப்படுகிறது. தவிர, கடந்த 10 ஆண்டுகளாக நகர்ப்புற தேர்தல் நடத்தப்படாததால், நகர கவுன்சிலர்களின் பணி என்ன? அந்த பதவிக்கான முக்கியத்துவம் என்ன? என்பதை மக்கள் மறந்து விட்டதும் மற்றொரு காரணியாக முன்வைக்கப்படுகிறது.
வார இறுதியில் தேர்தல் நடத்தப்பட்டதாலும், தொடர்ச்சியாக இரு நாட்கள் விடுமுறை வந்ததாலும், சென்னையில் இருந்த பலர் தங்களது சொந்த ஊர்களுக்கும், சுற்றுலாவுக்கும் படையெடுத்துவிட்டனர். இதுவும் வாக்குப்பதிவு குறைந்ததற்கு காரணம்.
மேலும், வார்டு மறுசீரமைப்பு காரணமாக, வாக்காளர்கள் பட்டியலில் பெயர்களை கண்டுபிடிப்பதில் வாக்காளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. ஒரு சிலர், எந்த வாக்குச்சாவடியில் தங்களுக்கு வாக்கு இருக்கிறது என்பதை கண்டறிய முடியாமல் தவிக்கும் நிலைக்கு ஆளானதையும் வாக்குப் பதிவின் போது காண முடிந்தது. இதனால் காலதாமதம் ஏற்பட்ட நிலையில், ஏராளமானோர் மாலை 5 மணிக்கு பிறகு தான் வாக்குச்சாவடிக்கு வந்துள்ளனர். அதற்குள் பொது வாக்காளர்களுக்கான வாக்குப்பதிவு நேரம் முடிந்து, கொரோனா நோயாளிகள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
வாக்குப்பதிவு நாளில் அரசு விடுமுறை அளித்திருந்தாலும், பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் இயங்கியுள்ளன. மேலும், ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்காமல் பணிக்கு வரும்படி வற்புறுத்தியிருக்கின்றன.
நகர்ப்புற உள்ளாட்சியின் முக்கியத்துவம் தொடர்பாக மக்களிடையே சரியான விழிப்புணர்வை ஏற்படுத்த, மாநில தேர்தல் ஆணையமும், சென்னை மாநகராட்சியும் போதிய அளவுக்கு நிதி ஒதுக்கி பரப்புரை மேற்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இறுதியாக, கொரோனா பரவல் அச்சமும், வாக்குச்சாவடிக்கு வரவிடாமல் பெரும்பாலான வாக்காளர்களை வீட்டுக்குள்ளேயே முடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
சென்னை மாநகராட்சியில் ஆண் வாக்காளர்களே அதிகமாக வாக்களித்துள்ளனர். மொத்தம் 45.58 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர். பெண் வாக்காளர்களில் 41.67 சதவிகிதம் பேர் மட்டுமே வாக்குச்சாவடிக்கு வந்துள்ளனர். இதர வாக்காளர்களில் 8.53 பேர் தங்கள் ஜனநாயக கடமையாற்றியுள்ளனர்.