FACT CHECK | மருதமலை முருகன் கோயிலுக்கு திமுக கரண்ட் தரவில்லையா? அண்ணாமலை பேச்சு எந்தளவுக்கு உண்மை?
கோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் தொகுதியில் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “கோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் தொகுதிக்கு வந்துவிட்டு மருதமலை முருகன் கோயிலைப் பற்றிப் பேசாமல் போனால் தவறாகிவிடும். 1962 வரை முருகனைப் பார்க்க வேண்டுமென்றால், கரண்ட் கிடையாது. சாதாரண படிக்கட்டில் ஏறவேண்டும். திமுக தனது கொள்கையாக மருதமலை முருகனுக்கு மின்சாரம் கொடுக்கக் கூடாது என்பதை கொள்கையாக வைத்திருந்தார்கள்.
அதை உடைத்து மருதமலை முருகன் கோயிலுக்கு மின்சாரத்தைக் கொடுத்தவர் யார் என்றால் சின்னப்பா தேவர். உங்களுக்கு அவரைப் பற்றி தெரியும். தமிழகத்திலே சினிமாவில் முக்கியமான படைப்புகளைச் செய்தவர். அவரே போய் முருகப் பெருமானுக்கு கரண்ட் ரிஜிஸ்ட்ரேசன் பணம் கட்டி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைப் பார்த்து முருகன் கோயிலுக்கு கரண்ட் வரவழைத்தார். திமுக எப்போதும் சனாதன தர்மத்துக்கும் இந்து தர்மத்துக்கும் எதிராக இருக்கும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு” எனப் பேசியுள்ளார்.
அதாவது, ’1962வரை மருதமலையில் கரெண்ட் கிடையாது. மருதமலை முருகன் கோயிலுக்கு மின்சாரம் கொடுக்கக்கூடாது’ என்று திமுக கொள்கையாக வைத்திருந்ததாக அண்ணாமலை குற்றச்சாட்டியிருந்தார்.
இது உண்மையா? இந்த FACT CHECK தொகுப்பில் பார்ப்போம்!
அண்ணாமலை பேச்சிலுள்ள முதல் தவறு!
திமுக ஆட்சிக்கு வந்ததே 1967-ம் ஆண்டில்தான். அதற்கு முன்பு ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சிதான். ஆக, 1962இல் திமுக ஆட்சிக்கே வரவில்லை. உண்மை அப்படியிருக்க, மருதமலை முருகன் கோயிலுக்கு திமுக மின்சாரம் தரவில்லை என அண்ணாமலை பேசியுள்ளார்.
1962 ஆட்சியாளருக்கான சான்று (இந்திய தேர்தல் ஆணையத்தில் 1962 மற்றும் 1967ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது யார் என்பதை அத்தளத்திலிருந்து Screenshot எடுத்துள்ளோம். இதோ அது...):
விளக்கம்...
1962ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், திமுக 143 இடங்களில் போட்டியிட்டு 50 இடங்களைக் கைப்பற்றி தமிழகத்தின் எதிர்க்கட்சியாக அமர்ந்தது. காங்கிரஸ் 206 தொகுதிகளில் போட்டியிட்டு 139 இடங்களைக் கைப்பற்றியதுடன் காமராஜர் முதல்வராக இருந்தார்.
1967 நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில்தான் திமுக முதன்முறையாக ஆட்சியைப் பிடித்தது. அப்போதைய முதல்வராக அண்ணாதுரை இருந்தார். கருணாநிதி பொதுப் பணித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்தத் தேர்தலில், 174 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, 137 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைக் கைப்பற்றியது. ஆக, வரலாறு எல்லாம் இப்படியிருக்கையில் அண்ணாமலை பேசியதில் தவறு இருப்பதாக நெட்டிசன்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அண்ணாமலையின் பேச்சுக்கு எதிராகக் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
அண்ணாமலை பேச்சிலுள்ள இரண்டாவது தவறு!
மேலும், மருதமலை கோயிலில் தற்போதுவரை உள்ள கல்வெட்டில் 1962ஆம் ஆண்டே மின்விளக்கு உபயம் செய்யப்பட்டிருப்பதாக இருக்கிறது. அதாவது, அண்ணாமலை குறிப்பிட்டுப் பேசியிருக்கும் அதே ஆண்டில் (1962) சின்னப்பா தேவரே மின்விளக்கு அமைத்துக் கொடுத்திருக்கிறார்.
அந்த விளக்கு மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரால் ஏற்றி வைக்கப்பட்டிருப்பது என்பதெல்லாம் உண்மை. ஆனால், அங்குதான் ட்விஸ்ட்.
அப்போது எம்.ஜி.ஆர் திமுக-வில் இருந்தார். அதாவது அப்போது அதிமுக-வே உதயமாகவில்லை. திமுக-வில் எம்.எல்.சி.யாக இருந்தார் எம்.ஜி.ஆர். ஆக, மின்விளக்கு திறக்கப்பட்டது, திமுக-வை சேர்ந்த ஒருவரின் மூலம்தான்.
அந்த தருணத்தில் எம்.ஜி.ஆர், கட்சி சார்பின்றி சின்னப்ப தேவருடனான நட்பின் அடிப்படையில் அதை துவங்கிவைத்தார் என்பது மட்டுமே விஷயம். சின்னப்ப தேவர் திரைப்பட தயாரிப்பாளர் என்பதாலும், அவர் எம்.ஜி.ஆர்-ஐ வைத்து பல வெற்றிப்படங்கள் கொடுத்திருந்ததாலும் நட்பின் அடிப்படையில் அதை செய்துவைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.
இப்படியாக இருவிஷயங்களை அண்ணாமலை தவறாக பேசியுள்ளார்.