இரவுநேர ஊரடங்கு காரணமாக தென் மாவட்டங்களுக்கு பகலில் கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.
நாளை முதல் தமிழக அரசு அறிவித்துள்ள இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதனால் இரவு நேர போக்குவரத்துக்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. வழக்கமாக தென் மாவட்டங்களுக்கு இரவு நேரங்களில் பேருந்துகள் அதிகமாக இயக்கப்படும். ஆனால் தற்போது இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதால் போக்குவரத்து சேவையை முறைப்படுத்தும் பணியில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், இரவு நேர ஊரடங்கு காரணமாக கோயம்பேட்டில் இருந்து நாளை முதல் பகல் நேரங்களில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.
காலை 6 மணிமுதல் பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. அதேபோல் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இரவு 10 மணிக்குள் அந்தந்த மாவட்டங்களை சென்று சேரும் வகையில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.