விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
தண்டையார்பேட்டை, அம்பத்தூர் மற்றும் கிண்டியை தலைமையிடமாகக் கொண்டு 3 வருவாய் கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 426 சதுர கி.மீ. பரப்பளவில் 3 வருவாய் கோட்டங்கள், 16 வட்டங்களை உள்ளடக்கி சென்னை மாவட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எஸ்.பி.உதயகுமார், ஓ.எஸ்.மணியன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அம்பத்தூரை தலைமையிடமாக கொண்ட மத்திய சென்னை கோட்டத்தில் அயனாவரம், அமைந்தகரை, மதுரவாயல், மாம்பலம், எழும்பூர் உள்ளிட்ட 47 கிராமங்கள் உள்ளன. தண்டையார்பேட்டையை மையமாகக் கொண்ட வடசென்னை கோட்டத்தில் திருவொற்றியூர், மாதவரம், பெரம்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட 32 கிராமங்கள் அடங்கியுள்ளன. கிண்டியை தலைமையிடமாக கொண்ட தென் சென்னை கோட்டத்தில் கிண்டி, மயிலாப்பூர், வேளச்சேரி, ஆலந்தூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட 43 கிராமங்கள் உள்ளன.
மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை சார்பில் முதற்கட்டமாக தமிழகத்திலுள்ள 21 மாவட்டங்களைச் சேர்ந்த 43 வட்டங்களுக்குரிய 24.11 லட்சம் கணினிப்படுத்தப்பட்ட நில அளவை புல வரைபடங்களை http.//eservices.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான இணையவழி சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.