பிரதமர் நரேந்திரமோடி தனது சுதந்திர தின உரையில் விஸ்வகர்மா யோஜனா எனும் புதிய திட்டத்தை அறிவித்தார். இத்திட்டம் மீண்டும் குலக்கல்வி முறையை கொண்டுவருவதற்கான முயற்சி என தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருகின்றன. இதையொட்டி நாளை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு எதிர்க்கட்சிகள் போராட்டத்தையும் அறிவித்துள்ளன.
நாடு முழுவதும் ஆகஸ்ட் 15 சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு டெல்லியில் உரையாற்றிய மோடி, “செப்டம்பர் 17 ஆம் தேதி விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்படும்” என அறிவித்தார். இத்திட்டத்திற்காக 13 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கருவிகள் மூலமும் கைகள் மூலமும் பொருட்களை செய்பவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்.
இத்திட்டத்தில் முதற்கட்டமாக 18 தொழில்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி, தச்சர், பொற்கொல்லர், குயவர், சிற்பிகள், காலணி தைப்பவர், கொத்தனார், கூடை பாய், துடைப்பம் நெய்பவர், பொம்மைகளை செய்பவர்கள், முடி திருத்துபவர்கள், பூமாலைகளை கட்டுபவர்கள், சலவைத் தொழிலாளர், தையல்காரர், மீன்பிடி வலை தயாரிப்பவர், படகு தயாரிப்பவர்கள், கவசம் தயாரிப்பவர்கள், இரும்புக் கொல்லர்கள், சுத்தியல் மற்றும் கருவிகள் செய்பவர்கள், பூட்டுகள் செய்பவர்கள் போன்றவர்கள் இதில் அடங்குவர்.
இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெறுபவர்களுக்கு பயிற்சி நாள்களில் தினமும் ரூ.500 உதவித் தொகையாக வழங்கப்படும். தொழிற்கருவிகளை பெற ரூ.15,000 வரை நிதியுதவியும் வழங்கப்படும். 5 ஆண்டுகளில் இத்திட்டம் மூலம் 30 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும். இத்திட்டத்தில் குறைந்த வட்டியில் கடனும் வழங்கப்படும்.
இதுதொடர்பாக புதிய தலைமுறைக்கு சில தினங்களுக்கு முன் திராவிடர் கழகத்தை சேர்ந்த மதிவதினி பேட்டி அளித்திருந்தார்.
விஸ்வகர்மா யோஜனா குறித்தான கேள்விக்கு அவர், “இத்திட்டம் அறிவித்ததும் முதல் எதிர்ப்பு திக தலைவரிடம் இருந்து தான் வந்தது. திராவிடர் கழகம் சார்பில் அனைத்து கட்சிக் கூட்டம் பெரியார் திடலில் நடத்தப்பட்டது. 18 குலத் தொழில்களை காப்பதற்காக 13 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்குகிறது. நாம் குலத்தொழில் என சொன்னால் அவர்கள் அதை பாரம்பரியம் என சொல்கிறார்கள்.
சமூகத்தில் கேவலம் என்ற எண்ணம் இல்லாமல், யாரும் அதை செய்பவர்களைப் பார்த்து அசிங்கமாக நினைக்காத ஒரு குலத்தொழில் கோவிலில் உள்ள அர்ச்சகர் தொழில் தான். அதுமட்டும்தான் புனிதமாக பார்க்கப்படுகிறது.
சாதியை ஒழிப்பது சாதி சார்ந்த சிக்கல்களை ஒழிப்பது அரசின் கடமை. அரசு என்பதே மக்கள் நலன் சார்ந்ததுதான். சமூகத்தில் தாத்தாவும் அப்பாவும் செருப்பு தைக்கிறார்கள் என்றால் மகனை மருத்துவராகவோ, வக்கீலாகவோ, பொறியாளராகவோ ஆக்கி பார்க்க வேண்டும் என்பதுதானே ஆரோக்கியமான சமுதாயத்திற்கு அழகாக இருக்க முடியும்? நீங்களெல்லாம் மருத்துவராக பொறியாளராக ஆகலாமா என வெளிப்படையாக கேட்கமுடியாமல் 18 குலத்தொழில்களை பட்டியலிட்டுள்ளார்கள். இதைத்தான் குலக்கல்வித் திட்டம் என சொல்கிறோம்” என்றார்.
இது குறித்து புதிய தலைமுறைக்கு பேசிய தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, “விஸ்வகர்மா என்பது ஒரு சமுதாயத்தின் பெயர். இந்த உலகத்தைப் படைத்தவர் விஸ்வகர்மா. விஸ்வ என்றால் உலகம். கர்மா என்றால் செயல். பெயரை ஏன் தமிழில் வைக்கவில்லை என்றால் அதற்கெல்லாம் பதிலே இல்லை.
ஒருவர் மலையாளத்தில் ஏன் வைக்கவில்லை என்பார். ஒருவர் தெலுங்கில் ஏன் வைக்கவில்லை என்பார். பொதுவான அலுவல் மொழியில் விஸ்வகர்மா என பெயர் வைக்கிறார்கள். சமஸ்கிருதம் எளிமையாக புரியும். வேறொன்றும் இல்லை. உலகத்தில் மூத்த மொழி, அற்புதமான மொழி தமிழ் தான். அதில் மாற்றுக்கருத்து கிடையாது. தமிழ்மொழி போல் பல மொழிகளில் இருந்து செதுக்கப்பட்டது சமஸ்கிருதம்” என்றார்.