நாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும் கண்காணிக்க 10 விசாரணை முகமைகளுக்கு அதிகாரம் அளித்திருப்பது பற்றி சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நாட்டில் உள்ள அனைத்து கணினிகளில் பாதுகாத்து வைத்திருக்கும் தகவல்கள் மற்றும் பரிமாறப்படும் தகவல்களைக் கண்காணிப்பது, அந்தத் தகவல்களை இடைமறித்து ஆய்வு செய்வது, தடை செய்வது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள மத்திய அரசின் 10 விசாரணை முகமைகளுக்கு உள்துறை அமைச்சகம் அதிகாரம் அளித்துள்ளது.
அதன்படி உளவுத்துறை, போதை மருந்து கடத்தல் தடுப்புப் பிரிவு, அமலாக்கப்பிரிவு, மத்திய நேரடி வரிகள் வாரியம், வருவாய் புலனாய்வு, சி.பி.ஐ., தேசிய புலனாய்வு அமைப்பு, டெல்லி போலீஸ் ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட 10 விசாரணை முகமைகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த முகமைகளுக்கு தேவை ஏற்படும் நேரத்தில் தகவல் தொடர்பு சேவை வழங்குவோர் அல்லது பயன்பாட்டாளர் அல்லது கணினி மையத்தின் பொறுப்பாளர் உதவ வேண்டும். அவ்வாறு ஒத்துழைக்க தவறினால் அவர்களுக்கு 7 ஆண்டுவரை கடுங்காவல் சிறையும், அபராதமும் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 69 உட்பிரிவு 1-ன்படி, இந்த அதிகாரத்தை 10 விசாரணை முகமைகளுக்கு உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கிடையில் மத்திய அரசின் முடிவு குடிமக்களின் அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது என காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இது அரசியல் கட்சிகளின் தகவல்களை சட்டவிரோதமாக பெறும் முயற்சி என்றும், இந்த நடவடிக்கை மூலம் எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன் தகவல்களும் கண்காணிக்கப்படலாம் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால் இவ்விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தவறாக பிரச்சாரம் செய்வதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சாடியுள்ளார். இது அனைவருக்குமான கண்காணிப்பு நடவடிக்கை அல்ல என்றும் தேசத்தின் பாதுகாப்பு நோக்கில் மட்டுமே இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் விளக்கம் அளித்தார். இது போன்ற நடைமுறைகளை கொண்டு வராவிட்டால் தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் பயங்கரவாதிகளை எப்படி பிடிப்பது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் இது போன்ற கண்காணிப்பு நடைமுறை காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலும் இருந்ததாகவும் அவர் விளக்கியுள்ளார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு இதுதொடர்பாக கருத்து தெரிவித்திருந்த உச்சநீதிமன்றம், தேசிய, மாநில பாதுகாப்பு ஒருபுறம் இருந்தாலும் தனி மனிதரின் உரிமை மீது மிகுந்த கவனமாக, சமநிலையுடன் அரசு செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் மத்திய அரசின் சார்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த அறிவிப்புக்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கார்த்திகேயன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “ தவறு செய்பவர்களுக்கு இந்த உத்தரவு நிச்சயம் பயத்தை ஏற்படும். இதனை ஒரு நல்ல முயற்சியாகத் தான் பார்க்க வேண்டும். தேச விரோத சக்திகளை இதன் மூலம் கண்டுபிடிக்கலாம். பணம் பதுக்குபவர்களையும் கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளது. பொதுமக்களுக்கு இடையூறாக இருக்காது என கருதுகிறேன் என கூறியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் துணைத் தலைவரான சுதா கூறும்போது, “ இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டிற்கே இதன்மூலம் ஆபத்து ஏற்படலாம். அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களை இதன்மூலம் எளிதாக கண்டுபிடிக்கலாம். இதன்மூலம் அவர்களுக்கு தொந்தரவும் கொடுக்கலாம். ஹேக்கர்கள் தகவல்களை திருடுவதை தடுக்க சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இப்போது அரசாங்ககே குடிமக்களின் தகவல்களை திருட முயற்சிக்கிறது. உண்மையில் இது ஜனநாயக நாடா அல்லது சர்வாதிகார நாடா என்ற சந்தேகம் நிலவுகிறது” என கூறியுள்ளார்.