ஆற்காடு அருகே அரியவகை சிலை வடிக்கும் கருங்கற்களை சமூக விரோதிகள் இரவோடு இரவாக லாரிகளில் கடத்துவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரி அருகே உள்ள துர்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சிங்காரப்பேட்டை மலைப்பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலங்களில் மர்ம நபர்கள் இரவு நேரத்தில் ஜெலட்டின் வெடிவைத்து பாறைகளை தகர்த்து ஜேசிபி இயந்திரம் மூலம் லாரியில் பாறைகளை சென்னை, மகாபலிபுரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் கருங்கற்களில் ஆன சிலைகளை வடிப்பதற்கு கடத்திச் செல்வதாக புகார் இருந்துள்ளது.
அரசுக்கு சொந்தமான இடத்திலிருந்து அரிய வகை விலை உயர்ந்த கற்களை விரைவில் கடத்துவதாக திமிரியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கொடுத்த புகாரின் பேரில் வருவாய் ஆய்வாளர் சம்பவ இடத்திற்குச் சென்று, நேரில் ஆய்வு செய்து அனுமதி பெறாமல் வெடிவைத்து இரவோடு இரவாக ஏற்றுவதை தடுத்து நிறுத்தினர்.
மேலும் இது தொடர்பாக கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் ஜேசிபி, லாரி, டிராக்டர், தோட்டா வண்டி உள்ளிட்ட வாகனங்களை அப்பகுதி மக்கள் சிறைபிடித்து திமிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தால் கடத்தல்காரர்கள் உட்பட பறிமுதல் செய்த வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இங்கு இருக்கும் பாறைகள் சிலை வடிப்பதற்கு ஏற்ற, கிரானைட் கல்லைவிட பல லட்சம் மதிப்புள்ள தரம் உயர்ந்தது என்பதால், இங்குள்ள கருங்கல் பாறைகளை அதிகாரிகள் உடைத்து ஏற்றுவதால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஆற்காடு வட்டாட்சியர் சுரேஷிடம் கேட்டதற்கு கடந்த வாரம்தான் பொறுப்பேற்றதாகவும், இதுகுறித்து தனக்கு எந்த புகாரும் வரவில்லை என்றும், மேலும் இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டவர்களை விசாரணை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.