நேற்று காலை ‘நக்கீரன்’ கோபால்தான் தலைப்பு செய்தி. ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரில் பேரில் அவர் 124ஆம் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த நடவடிகைக்கு எதிராக திருவல்லிக்கேணி காவல்நிலையம் முன்பாக உட்கார்ந்து வைகோ தர்ணாவில் ஈடுப்பட்டார். உடனே நிலைமை மேலும் பரபரப்பானது. அடுத்து ஸ்டாலின் வந்தார். கணநேரத்தில் காட்சிகள் மாறின. இறுதியில் நீதிமன்றம் கோபாலை விடுதலை செய்தது. அடுத்த நொடி அவர் உலக செய்தியாகி இருந்தார். இந்நிலையில் அவரை சந்தித்து புதிய தலைமுறை சார்பாக சில கேள்விகளை முன் வைத்தோம். அவர் நமக்களித்த பிரத்யேக பேட்டி.
அவதூறு வழக்குக்கும் உங்கள் மீது போடப்பட்ட 124 வழக்குக்கும் என்ன வித்தியாசம் என்று நினைக்கிறீர்கள்?
“ஜெயலலிதா என் மீது போட்ட 20க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறோம். இன்னமும் கூட அது நிலுவையில் உள்ளது. ஆனால் 124 என்பது ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்தாலோ, அவர் மீது தாக்குதல் நடத்த முயன்றாலோ போடக்கூடிய வழக்கு. அப்படி ஏதும் நடக்கவில்லை. எனது செய்தியால் ஆளுநர் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாக ஆளுநர் மாளிகை சொல்கிறது. அப்படி இருந்தால் அவர் ஆளுநர் மாளிகையிலேயே முடங்கி இருக்க வேண்டும். ஆனால் அவர் பணியிலேயேதான் இருந்திருக்கிறார்.”
தென் இந்தியாவில் பத்திரிகையாளர் மீது 124 வழக்கு போடப்பட்டதையும், வழக்கை விசாரித்து நீதிமன்றம் விடுவித்த செய்தியும் தேசிய அளவில் பேசப்படுகிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
“இது பெரிய விஷயம். என்னை அச்சுறுத்தவே போடப்பட்ட வழக்கு இது. ஆனாலும் எனக்காக, ஒரு பத்திரிகையாளனுக்காக தமிழகம் மட்டுமில்லாமல் அமெரிக்கபத்திரிகை வரை திரண்டு நின்றது, உண்மையிலேயே பெரிய விஷயம். அவர்களுக்கெல்லாம் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.”
உங்களின் கைதுக்கு பெரும்பாலான அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், டிடிவி தினகரன் மட்டும் உங்களின் கைதை சரி என்கிறார். அதை எப்படி பார்க்கிறீர்கள்?
“டிடிவி தினகரனின் குடும்ப அரசியலை பற்றி நான் பலமுறை எழுதி இருக்கிறேன். தினகரனின் மன்னார்குடி உறவுகளில் தலைக்கு ரூ.10000 கோடி இல்லாதவர்கள் எவருமில்லை. அதுகுறித்தும், அவர்களின் சொத்து விவரங்கள் குறித்து ‘நக்கீரன்’ பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் அவர் எப்படி எனக்கு ஆதரவு தெரிவிப்பார்?”
கவர்னரை பற்றி எழுதிய “நக்கீரன்’, கவர்னர் மாளிகையை தொடர்பு கொண்டு அவர்களது தரப்பையும் கேட்டார்களா என்று பாஜகவை சேர்ந்த ஆசிர்வாதம் ஆச்சாரி கேள்வி எழுப்பியுள்ளாரே?
“நாங்கள் ஒவ்வொரு கட்டுரை முடிவிலும், ''இது குறித்து விசாரிக்க ஆளுநர் மாளிகை தொடர்புகொண்ட போது'' என்றே குறிப்பிட்டு வருகிறோம். நிர்மலாதேவி விவகாரத்துக்கு 5 மாதமாக கவர்னர் மாளிகை பதில் ஏதும் தெரிவிக்கவில்லை. நிர்மலாதேவியின் பிரச்னை அன்றே திடீரென்று கவர்னர் செய்தியாளர்களை சந்தித்ததே சந்தேகத்தை கிளப்பியது. இந்த விவகாரத்தில் பெரிய பூதம் ஒளிந்துள்ளது. அதை வெளிக்கொண்டு வரவே நாங்கள் முயற்சி செய்கிறோம்.”
ஒரு பத்திரிகை என்பது சட்டதிட்டங்களுக்கு உட்பட வேண்டும். அரசை மீறி செயல்படக்கூடாது என்று சொல்கிறார்களே?
“தவறு செய்வதை வெளிக்கொணரக்கூடாது என்று எந்தச் சட்டத்திலும் இல்லை. தவறு செய்தால் ஆண்டவனே ஆனாலும் தவறுதான்.‘நக்கீரன்’ என்று பெயர் வைத்துக்கொண்டு மேம்போக்காக பத்திரிகை நடத்த முடியாது.”
பாஜக, அதிமுக மீது விமர்சனங்கள் வைக்கும் ‘நக்கீரன்’ திமுக மீது பெரிய விமர்சனங்களை வைப்பதில்லை என்று கூறுகிறார்களே?
“திமுக தற்போது ஆட்சியில் இல்லை. 8 ஆண்டுகளாக அதிமுகதான் ஆட்சியில் உள்ளது. ஆகவே எழுதுகிறோம். திமுகவும் என் மீது 20க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகளை போட்டுள்ளது. எனக்கு ‘பெரியார்’ விருது வழங்கிய போது ‘என்னை எதிர்த்து ‘நக்கீரன்’ எழுதுகிறது’ என கருணாநிதியே மேடையிலேயே பேசி இருக்கிறார். ‘நக்கீரன்’ முன் அனைவரும் சமம்.” என்றார்.