ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தில் பண்டைய கால தமிழர்களின் வாழ்க்கையை விளக்கும் வரலாற்றுச் சுவடுகள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. சுவாரஸ்யமான தகவல்களைக் கொண்டுள்ள அந்தச் சுவடுகளைக் காட்சிப்படுத்த தொல்லியல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தில் பண்டைய கால தமிழர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் தென்படத் தொடங்கியதையடுத்து அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் இந்த அகழாய்வுப் பணியில் பல்வேறு அரியவகை வரலாற்றுச் சுவடுகள் கிடைத்துள்ளன. குறிப்பாக சுடுமண் சிற்பங்கள், யானைத் தந்தங்களால் செய்யப்பட்ட அணிகலன்கள், மண் பாண்டங்கள் உள்ளிட்ட பொருட்கள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றை ஆய்வு செய்த போது அவை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமையானது என்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மத்திய தரைகடல் நாடுகளுடன் தமிழர்கள் மேற்கொண்ட வணிகத்தையும் இந்த பொருட்கள் உணர்த்துகின்றன.
தலை முடி கூட நுழைய முடியாத மிக மெல்லிய துவாரங்களுடன் கூடிய மணிகளைக் கொண்ட அணிகலன்கள், தமிழர்களின் கலை நுட்பத்தை பறைசாற்றுகின்றன. அதுமட்டுமல்லாமல் 30 ஆண்டுகால ஆராய்ச்சியில் சிலைகள் எதுவும் கிடைக்காமல் இருப்பதன் மூலம் அப்போதைய மக்கள் இயற்கையை வழிபட்டு வந்ததும் தெரிகிறது. இப்படி தமிழர்களின் வியக்கத்தக்க வாழ்க்கை முறையை வெளிக்காட்டும் வரலாற்றுச்சுவடுகளை காட்சிப்படுத்த தொல்லியல்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
தோண்டத் தோண்ட சங்க கால அரிய பொக்கிஷங்கள் கிடைப்பதால் கீழடியை மிஞ்சும் வகையில் அழகன்குளம் அகழாய்வு இருக்கும் என அதன் தமிழக அரசு தொல்லியல் துறையின் மூலம் பல்வேறு பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்து மண்ணில் புதைந்துள்ள வரலாறுகளை வெளியுலகிற்கு ஆவணப்படுத்தி வருகிறது. இதன் மூலம் பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்களின் கலை, கலாசாரம், பண்பாடு, வணிகம், எழுத்தறிவு, வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு நுட்பமான வாழ்வியல் கூறுகள் தெரிய வந்துள்ளது.
அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அழகன்குளம் கிராமம் சங்ககாலத்தில் புகழ் பெற்ற வணிகநகரமாக விளங்கியது என்பது இப்பகுதியில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வின்போது கண்டறியப்பட்டது.