தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம், பொதுத்தேர்வுக்கான தேர்வுக்கட்டணத்தை வசூலித்து அதை வரும் 20-ம் தேதிக்குள் ஆன்லைனில் செலுத்திட மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, தேர்வுத்துறை இயக்குநர் சேது ராமவர்மா உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர் பிறப்பித்துள்ள அந்த உத்தரவில், இந்த தேர்வு கட்டண விகிதத்தில், தமிழை பயிற்று மொழியாகக் கொண்டு தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசு பொதுத்தேர்வில் முதன்முறையாக இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மட்டுமன்றி கண் பார்வையற்றவர்கள், காது கேளாதவர்கள், வாய் பேச முடியாதவர்கள் ஆகிய மாற்றுத்திறனாளிகளுக்கும் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. போலவே அரசு & உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் MBC, SC, ST, SCA மாணவர்களுக்கும் தேர்வுக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.