அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீட்டில் முறைகேடு நடந்ததாக கூறப்படுவது குறித்த முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக தேர்வு மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்த பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு முறைகேடாக அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அண்ணா பல்கலைக்கழகத்தின் தனிப்பட்ட விசாரணைக்காக எடுத்து வைக்கப்பட்டிருந்த விடைத்தாள்களை பறிமுதல் செய்துள்ளனர். முறைகேடு நடந்ததாக கூறப்படுவது குறித்த முக்கிய ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரம் தேர்வு எழுதிய சுமார் 3 லட்சம் மாணவர்களின் விடைத்தாள்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக தெரிகிறது.
இந்த முறைகேடு தொடர்பாக தற்போது அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளரிடமும், மற்ற பணியாளர்களிடமும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி உள்ளது. இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் உமாவை விசாரணக்கு அழைப்பதற்கான சம்மன் விரைவில் பிறப்பிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.