மதுரை கிழக்குத் தொகுதியிலிருந்து இரண்டுமுறை தேர்வு செய்யப்பட்டு சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர் நன்மாறன் (74) மூச்சுத் திணறல் காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இன்று காலமானார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். தொடக்கத்தில் தொழிற்சங்கவாதியாக வாழ்க்கையைத் தொடங்கிய நன்மாறன், பின்னர் சிபிஎம் கட்சியில் இணைந்து தீவிரமாகப் பணியாற்றினார். மிகக் கடினமான கருத்துக்களையும் மக்களுக்குப் புரியும் வகையில் எளிமையாகவும், நகைச்சுவையோடும் விளக்குவதில் வல்லவர். அதனாலேயே 'மேடைக் கலைவாணர்' என்ற அடைமொழியிட்டு அழைக்கப்பட்டார். தமிழில் முதுகலை பயின்றவர். மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் மீது கொண்ட பற்றால் அவர்களின் வரலாறுகளை புத்தகமாக எழுதி இருக்கிறார். தமுஎகசவில் மதுரைக்கிளை உறுப்பினராகவும், மாநிலக் குழு, மாநிலச் செயற்குழு உறுப்பினராகவும் பங்காற்றி, மாநில துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார்.
1968இல் குறிஞ்சி இதழை நடத்திவந்த பழ.நெடுமாறனுடன் தொடர்பு ஏற்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பிரிவாக ‘ஊழியர் கலை எழுச்சி மன்றம்’ என்ற அமைப்பு இருந்தது. இதில் எம்.ஆர்.எஸ்., மணி, புலவர் ராஜாமணி போன்றோர் இருந்தனர். அவர்களுடன் ஏற்பட்ட தொடர்பால் இலக்கிய கூட்டங்களில் கலந்து கொண்டார். 1971இல் தேர்தல் பிரசார மேடைகளில் முதன்முதலாக பேச ஆரம்பித்தார். கடந்த 2001 மற்றும் 2006-ஆம் ஆண்டுகளில் மதுரை கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோரிடம் நன்மதிப்பைப் பெற்றவர்.
சட்டமன்ற உறுப்பினராக இருந்த வாய்ப்பை, மதுரை மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், ஐ.டி.பார்க், டைடல் பார்க் வரை மதுரைக்கு கொண்டு வரவும் பயன்படுத்திக் கொண்டவர். மதுரையில் உயர்நீதிமன்ற கிளை உருவாக தன் பங்களிப்பை செலுத்தி இருக்கிறார். இறக்கும்வரை வாடகை வீட்டில் குடியிருந்த கரை படியாத கைகளுக்கு சொந்தக்காரர். சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலங்களில் இவருடைய அலுவலகம் சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாள்களிலும் திறந்தே இருக்கும். மதுரை ஆரப்பாளையத்தில் தனது மனைவி சண்முகவள்ளியோடு வசித்துவந்த இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்தமகன் குணசேகரன் நாகமலைப் புதுக்கோட்டையிலுள்ள பாண்டியன் கிராம வங்கியில் பணியாற்றுகிறார். இளையமகன் ராஜசேகரன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தற்காலிகப் பணியாளராகப் பணிசெய்து வருகிறார்.
அண்மையில் தனக்கென்று குடியிருக்க சொந்த வீடு ஒன்றை ஒதுக்கக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியருக்கு நேரில் வந்து தனது மனைவியோடு மனு கொடுத்தார். இது மிக பரபரப்பாகப் பேசப்பட்டது. இதனையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் உதவிகள் வந்ததைக்கூட மறுத்துவிட்டார். இந்நிலையில் மூச்சுத் திணறல் காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். நன்மாறனுக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று மாலை 4 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.