நேற்று புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெற்ற தமிழகத்தின் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டியில் களம் இறக்கப்பட்ட முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வெள்ளைகொம்பன், கருப்பு கொம்பன் ஆகிய இரண்டு காளைகளும் வீரர்களின் பிடியில் சிக்காமல் வெற்றி பெற்று பரிசுகளை தட்டி சென்றது பார்வையாளர்களை கவர்ந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சி கிராமத்தில் இந்த ஆண்டிற்கான தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று விமர்சையாக நடைபெற்று முடிந்தது. இந்தப் போட்டியில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் தற்போதைய விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கரின் வெள்ளைக் கொம்பன், கருப்பு கொம்பன் ஆகிய இரண்டு காளைகள் அடுத்தடுத்து களம் இறக்கப்பட்டது.
வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த இந்த இரண்டு காளைகளும் வீரர்களின் பிடியில் சிக்காமல் கம்பீரமாக களத்தை கடந்து சென்றது. இதனையடுத்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் இரண்டு காளைகளும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.மேலும் வெள்ளை கொம்பன் காளைக்கு மிதிவண்டி பரிசாகவும் கருப்பு கொம்பன் காளைக்கு கட்டில் பரிசாகவும் வழங்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை பொறுத்தவரையில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பதிலும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதிலும் அதிக ஆர்வம் கொண்டுவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இவர் வளர்த்து வந்த கொம்பன் என்ற காளை கடந்த 2018 ஆம் ஆண்டு அலங்காநல்லூர் உள்ளிட்ட தமிழகத்தின் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் நின்று விளையாடி ஒட்டுமொத்த ஜல்லிக்கட்டு ரசிகர்களையும் தம் பக்கம் ஈர்த்த நிலையில் அந்த காளை அதன் பின்பு தென்னலூர் ஜல்லிக்கட்டில் உயிரிழந்தது.
அதன் நினைவாக தற்போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெள்ளை கொம்பன், கருப்பு கொம்பன், சின்னக் கொம்பன், செவலைக்கொம்பன் என நான்கு காளைகளை வீட்டில் வளர்த்து வருகிறார்.