அதிமுக கொடியுடன் இன்று ஜெயலலிதா நினைவிடம் சென்று கண்ணீருடன் மரியாதை செலுத்திய சசிகலாவின் நடிப்புக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம் எனக் கூறியுள்ளார் அதிமுக ஜெயக்குமார்.
அதிமுகவின் 50-வது ஆண்டு தொடக்க விழா நாளை (அக். 17ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்றைய தினம் அதிமுக கொடி பொருத்திய காரில், ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளார் சசிகலா. சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்த பின் ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்வது இதுவே முதல்முறையாகும். தமிழக அரசியல் வரலாற்றில் இது முக்கிய நிகழ்வாக அமையக்கூடும் என விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சசிகலா ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்ற அதேநேரத்தில் அதிமுக-வின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஜெயலலிதா நினைவிடத்துக்கு தினமும் பலர் வந்து செல்கின்றனர். அதில் ஒருவர்தான் சசிகலா. அப்படியிருக்கையில் யானை பலம் கொண்ட அதிமுகவை, கொசு தாங்குவதாக சொல்வது நகைச்சுவையாக உள்ளது. சசிகலாவின் நடிப்புக்கு, ஆஸ்கார் விருதே கொடுக்கலாம். அதிமுகவில் சசிகலாவுக்கு நிச்சயம் இடமில்லை. அமமுக-வில் இடமிருந்தால், அதில் எங்களுக்கு ஆட்சேபமில்லை” எனக்கூறினார்.