தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தலைச் சேர்ந்தவர் மாடசாமி. ஓய்வுபெற்ற இராணுவவீரரான இவர், தன் வீட்டின் முன்பு மண்டபம் எழுப்பி உயிரிழந்த தன் மனைவி வள்ளியம்மாளுக்கு சிலை எழுப்பியதுடன், தனக்கும் சிலை வைத்துள்ளார்.
இதுகுறித்து மாடசாமி கூறுகையில், “நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே இதே ஊர்தான். 10-ம் வகுப்பு முடித்ததுமே ராணுவத்துக்கு விண்ணப்பித்து, ’மெட்ராஸ் இன்ஜினயரிங் குருப்’-ல வயர்லெஸ் ஆபரேட்டர் சேர்ந்தேன். 1961-ல் கோவா மாநிலம், 1965-ல் பாகிஸ்தான், 1971-ல் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு எதிராக நடந்த யுத்தங்களில் பங்குபெற்ற பெருமை எனக்குண்டு.
இதையடுத்து 1975-ல் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று தூத்துக்குடி மத்திய கனநீர் பணியில் சேர்ந்து 2000-ல் ஓய்வு பெற்றேன். எனக்கு திருமணமாகி ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். எனது மனைவியுடன் 48 ஆண்டு இணைந்து வாழ்நதுள்ளேன். எங்களது இத்தனை ஆண்டுகால வாழ்க்கையில் என்மீது மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்ட என் மனைவி வள்ளியம்மை, அவளது உடல்நிலையில் அக்கறை கொள்ளாமல் விட்டுவிட்டாள். 2014 ஜனவரி 25-ந்தேதி உடல்நலக்குறைவால் வள்ளியம்மை காலமானார். அவளது பிரிவை தாங்கமுடியாமல் மனம் நொந்து வருத்தப்பட்டேன். நாங்கள் வாழ்ந்த வாழ்வு அர்த்தமுள்ளது. அதை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்த எண்ணி அவளுக்கு சிலை வைக்க முடிவு செய்தேன். சற்றும் தாமதிக்காமல் கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடிக்கு சென்று, வள்ளியம்மையை சிலையாக செய்து வாங்கிட்டு வந்து வைத்தேன்.
வாழும் காலம் வரை என்னை சுமந்த அவளை என் வாழ்க்கை முழுவதும் தாங்க எண்ணி அவளுக்கு 4 தூண்கொண்ட அமைப்பில் மண்டபம் எழுப்பி சிலை வைத்தேன். சிலையாக கூட அவளை நான் பிரியக்கூடாதென்று, அடுத்த ஆண்டே என்னோட சிலையையும் அவள் சிலைக்கு பக்கத்திலேயே நிறுவினேன். எனது சிலையை நிறுவ பிள்ளைகள் முதற்கொண்டு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் நான் என் முடிவில் உறுதியாய் இருந்து அதை செய்து முடித்தேன். தினமும் காலையில் வள்ளியம்மை சிலைக்கு அபிஷேகம் செய்து, மாலை போட்டு சாமி கும்பிட்டுட்டுத்தான் அடுத்த வேலையைத் தொடங்குவேன். வள்ளியம்மை என்னை விட்டுப் பிரிஞ்சது சனிக்கிழமை.
அதனால, ஒவ்வொரு சனிக்கிழமையும் கருப்புச்சட்டை போடுறது என்னோட வழக்கம். அவளோட பிறந்தநாள், இறந்தநாள் ஆகிய இரண்டு நாளிலும் வீட்டுப்பக்கத்தில் உள்ள மண்டபத்தில் ஊர் மக்களுக்கு சாப்பாடு போடுவேன். இல்லாதவங்களுக்கு என்னால முடிந்த உதவிகளைச் செய்வேன். இருவரும் நன்றாக வாழ்ந்த காலங்களில் என்னை அருகிலிருந்து கவனிப்பது அவளுக்கு அவ்வளவு பிரியமானது. ஆனால் எனது மனைவி உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்றபோது இனி மது குடிக்க வேண்டாம் என அன்பாய் கேட்டுக் கொண்டதால் மதுப்பழக்கத்தை கை விட்டேன்.
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது" எனும் வள்ளுவனின் குறளுக்கு ஏற்ப நானும் வள்ளியம்மையும் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு பிரதிபலிப்பாக எங்களது இருவரின் சிலையையும் நிறுவி உள்ளேன். அவளுடன் வாழ்ந்த வாழ்க்கையில் கடுகளவேனும் எங்களுக்குள் பிரச்சினை என்பது ஏற்பட்டது கிடையாது. அவள் இல்லாத இந்த வாழ்க்கையை தினமும் அவளை எண்ணியே நாட்களை கடத்தி வருகிறேன். அடுத்த பிறவி என்பது உண்மை எனில் மீண்டும் வள்ளியம்மையே எனக்கு மனைவியாக வரவேண்டும் என மனதார வேண்டிக் கொள்கிறேன்” எனத் தெரிவிக்கிறார் மாடசாமி.