செய்தியாளர்: அருளானந்தம்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள T. கள்ளிப்பட்டியை சேர்ந்த சுப்புராஜ் மற்றும் சுப்பு தாய் ஆகியோரின் மூத்த மகன் நாகமுத்து. இவர் பட்டியலின பிரிவை சேர்ந்தவர். இவர் கடந்த 2009 முதல் பெரியகுளம் அருகே மலை மேல் உள்ள கைலாசநாதர் திருக்கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவது, அங்கு கோவில்களில் சிறு சிறு பணிகளை செய்து வருவது என்று இருந்துள்ளார்.
ஒருகட்டத்தில் அந்தக் கோவிலின் அடிவாரத்தில் உள்ள நுழைவாயில் அருகே சிறு கடை அமைத்து அந்த கடையில் கோவில் பூஜைகளுக்கு தேவையான பத்தி, சூடம், எலுமிச்சம்பழம், பூ, வாழைப்பழங்கள், தேங்காய் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்தும் வந்துள்ளார்.
இந்நிலையில், 05.05.2012 அன்று, கோவிலுக்கு வந்த உறவினர்கள் சிலருக்கு சாமியின் பாதத்தில் இருந்த எலுமிச்சம் பழம் மற்றும் மலர்களை வழங்குமாறு கேட்டுள்ளார் நாகமுத்து.
ஆனால், பாதத்தில் இருந்த பூஜை பொருட்கள் தர முடியாது என பழனிச்சாமி மற்றும் வெங்கிடுசாமி என இருவர் தெரிவித்ததாகவும் இதனால் நாகமுத்துவுக்கும் கோவில் திருப்பணி குழுவில் இருந்த இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட இருவரும் நாகமுத்துவை தரக்குறைவாக ஜாதி பெயரை கூறி திட்டியதாக கூறப்படும் நிலையில் இது தொடர்பாக பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளித்துள்ளார் நாகமுத்து.
இந்தநிலையில், இந்த வழக்கை திரும்பபெறும் படி முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் சகோதரரான ஓ ராஜா உட்பட 7 பேர் மீது நாகமுத்துவை மிரட்டியதாக கூறப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மீண்டும் காவல்நிலயத்தில் இவர்கள் மீது நாகமுத்து புகார் அளித்திருக்கிறார். இதனால், தங்கள் மீதுள்ள புகாரை திரும்ப பெறும்படி, மீண்டும் மிரட்டியுள்ளனர்
இந்நிலையில், ’எனக்கும் என் குடும்பத்துக்கும் பாதுகாப்பு காவல்துறை செய்யவில்லை அதனால் என் மரணத்தையே நான் பாதுகாப்பாக அர்ப்பணிக்கிறேன்’ என்றும் காரணமானவர்கள் ஓ ராஜா, மணிமாறன், வி எம் பாண்டி, சிவகுமார், ஞானம், லோகு, சரவணன், ஆகிய ஏழு நபர்களின் பெயர்களை கடிதத்தில் எழுதி வைத்து விட்டு நாகமுத்து தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று வந்துள்ளது. அதில், “குற்றம்சாட்டப்பட்ட 7 பேரில், வி எம் பாண்டி என்பவர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்துள்ளார். பிறர் தொடர்பாகவும் போதிய ஆதாரங்கள் இல்லை” என்று கூறி ஓ.ராஜா உட்பட மீதமுள்ள 6 பேருக்கு விடுதலை அளித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தீர்ப்பு குறித்து ஓ.ராஜா சார்பில் வழக்கறிஞர் சந்திரசேகர் கூறும் போது, “இது பொய் வழக்கு 43 சாட்சியங்கள், 3 தடயங்களை விசாரணை செய்யப்பட்டது. நீதிபதி சரியான தீர்ப்பை வழங்கியுள்ளார்” என்றார்.
சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் பாப்பா மோகன் கூறும் போது, “பூசாரி நாகமுத்து தொடர்ந்து மிரட்டப்பட்டுள்ளார். விடுதலையை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது சமூகநீதிக்கான போராட்டம். இது தற்கொலை வழக்கு மட்டுமல்ல, வன்கொடுமை சேர்ந்த வழக்கு. இன்று நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. கண்டிப்பாக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம்” என தெரிவித்தார்.