மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தையொட்டி, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.
ஜெயலலிதாவின் 71-ஆவது பிறந்தாளையொட்டி சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா புகைப்படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அத்துடன் தமிழகம் முழுவதும் உள்ள ஜெயலலிதாவின் தொண்டர்கள் மற்றும் விசுவாசிகள் தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தும் வகையில் நலத்திட்டங்களை செய்து வருகின்றனர்.
இதற்கிடையே அமைச்சர் ஜெயக்குமார் தனது விசுவாசத்தை வெளிப்படுத்தும் வகையில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அதில், “அன்றும், இன்றும், என்றும் அம்மா. அன்று அம்மாவின் நிழலில் விழுதாய் ! இன்று அம்மாவின் நினைவில் விதையாய் ! என்றும் அம்மாவின் வழியில் விசுவாசியாய் ! கலங்கும் இதயத்தில் மறையாத நினைவுகளுடன் நீங்கள் விட்டுச் சென்ற ‘லட்சியப் பாதையில்’ என்றும் தொடரும் எங்கள் பயணம்” என உருக்கமாக தெரிவித்துள்ளார். அதனுடன், 1990ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று தான் கொடுத்த பிறந்த நாள் விளம்பரத்தையும் பகிர்ந்துள்ளார்.