தமிழ்நாட்டின் மற்ற இடைத்தேர்தல்களை விடவும் அதிகளவில் பேசுபொருளாக அமைந்திருக்கிறது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல். தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் தொட்டே பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் இருக்கும் தொகுதியாகவே மாறியிருந்தது ஈரோடு கிழக்கு.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், அ.தி.மு.க சார்பில் தென்னரசும், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகாவும், தே.மு.தி.க சார்பில் ஆனந்தும் போட்டியிட்டனர். இருப்பினும் ஈரோடு கிழக்கு தொகுதி திமுக கூட்டணியின் காங்கிரஸ் vs அதிமுக என்ற அடிப்படையில் இருமுனை போட்டியாகவே இருந்து வந்தது.
இரு கட்சிகள் சார்பிலும் தீவிரமான பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டன. இதுபோக, வாக்காளர்களை அடைத்து வைத்ததாக திமுக மீது அதிமுகவும், வாக்காளர்களுக்கு பரிசு பொருட்களை கொடுத்து கவரப்பார்க்கிறது என அதிமுக மீது திமுகவும் பரஸ்பரமாக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தன.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 27ம் தேதி பதிவான வாக்குகள் இன்று காலை முதல் தொடர்ச்சியாக எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி தபால் ஓட்டு தொடங்கி கிட்டத்த 11 சுற்று வாக்கு எண்ணிக்கும் முடிந்திருக்கும் வேளையிலும் காங்கிரஸ் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனே பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.
அதாவது, பதிவான சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் வாக்களில் இதுவரையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 83 ஆயிரத்து 528 வாக்குகள் பெற்றிருக்கிறார். ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் தென்னரசு 32 ஆயிரத்து 360 வாக்குகளே பெற்றிருக்கிறார். 51 ஆயிரத்து 168 வித்தியாசத்தில் இளங்கோவன் முன்னிலையில் இருக்கிறார்.
இந்நிலையில், அதிமுக வேட்பாளரான தென்னரசுவின் வீடு அருகே உள்ள 124வது வாக்குச் சாவடியில் பதிவான வாக்குகளிலும் காங்கிரஸின் இளங்கோவனே முன்னிலையில் இருக்கிறார். அதன்படி, அதிமுக 192 வாக்குகள் பெற்றுள்ள நிலையில் காங்கிரஸ் 463 வாக்குகளை பெற்றிருக்கிறது. 32 ஆயிரத்துக்கும் மேலான வாக்குகளை பெற்று டெபாசிட்டுக்கு தேவையான வாக்குகளை அதிமுக பெற்றிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.