'ஆட்சியில் இருக்கும்போது பா.ஜ.க., காங்கிரஸ் இரண்டுமே இந்தியை திணிக்கின்றன' - திருமாவளவன்

'ஆட்சியில் இருக்கும்போது பா.ஜ.க., காங்கிரஸ் இரண்டுமே இந்தியை திணிக்கின்றன' - திருமாவளவன்
'ஆட்சியில் இருக்கும்போது பா.ஜ.க., காங்கிரஸ் இரண்டுமே இந்தியை திணிக்கின்றன' - திருமாவளவன்
Published on

இந்தியாவில் ஒரு பொது மொழி தேவை என்பதற்காக அவரவர் தாய் மொழியை அழிக்க வேண்டும் என்கிற முயற்சியில் தொடர்ந்து ஆட்சி அதிகார பீடத்தில் இருந்த காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் சரி, இன்றைய பா.ஜ.க‌. ஆட்சியிலும் அது தொடர்ந்து நடைபெற்று வருகிறது என விமர்சித்துள்ளார் தொல்.திருமாவளவன்.

தமிழ்நாடு கலை, இலக்கிய பெருமன்றம் நடத்தும் இந்தி சமஸ்கிருத திணிப்பு-எதிர்ப்பு கருத்தரங்கம் ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள தேவநேய பாவாணர் நூலக அரங்கத்தில் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சுப்புராயன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்‌.திருமாவளவன் உள்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் தொல்.திருமாவளவன் பேசுகையில், ''நாம் தொடர்ந்து இந்தி மற்றும் சமஸ்கிருத மொழி திணிப்பை எதிர்த்து போராடி வருகிறோம். நமக்கு முந்தைய தலைமுறையினரும் போராடினார்கள். நாமும் போராடிகிறோம். நமக்கு பிந்தைய தலைமுறையினனும் எதிர்ப்பார்கள். இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியை நாம் எதிர்க்கவில்லை. இந்த மொழிகள் திணிக்கப்படுவதை தான் எதிர்க்கிறோம். கையில் ஆட்சி உள்ளது என்பதால் அதிகாரத்தை பயன்படுத்தி அவர்கள் மறைமுகமாகவும், நேரடியாகவும் இந்தி மொழியை திணிக்கிறார்கள். ராஜாஜி காலத்தில் இருந்து இந்தி மொழி திணிக்கப்பட்டு வருகிறது.

ஆட்சி பீடத்தில் இருப்பவர்கள் தங்கள் வசதிக்காக மொழியை திணித்து வருகிறார்கள். ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டவர்கள். அவன் எந்தந்த நாட்டில் ஆட்சி பீடத்தில் இருந்த போது ஆங்கில மொழியும் திணிக்கப்பட்டது. இதனால் தான் உலகில் பெரும்பாலான நாடுகளில் ஆங்கிலம் பேசப்படுகிறது. ஜனநாயகத்தில் பெரும்பான்மையாக உள்ளவர்கள் தான் ஆட்சியாளர்களாக உள்ளனர். இந்தியாவில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. ஆயிரத்துக்கும் அதிகமான மொழிகளுக்கு எழுத்து வடிவம் இல்லை. மதத்தின் அடிப்படையில் பெரும்பான்மை இருந்தால் அதே மதத்தின் அடிப்படையில் சிறுபான்மையும் உள்ளது. ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். ஒரே நாடு, ஒரே மொழி என்பது ஜனநாயகத்துக்கு எதிரானது. எண்ணிக்கையில் பார்ப்பனர்கள் குறைந்த சதவீதமாக உள்ளனர். ஆனால் பார்ப்பனியத்தை ஏற்றுக்கொண்டவர்கள் அதிகமாக உள்ளனர்.

உச்சநீதிமன்றம் உள்பட பல நீதிமன்றங்களில் பார்ப்பனர்கள் தான் அதிகமாக உள்ளனர். துணை வேந்தர்கள், ஆளுநர்கள், ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர்க்கல்வி நிறுவனங்களில் அவர்களே அதிகமாக உள்ளனர். சமஸ்கிருதம் என்ற மொழி யார் பேசுகிற மொழி. சமஸ்கிருத எதற்கான மொழி. 7 முதல் 8 கோடி பேர் பேசும் மொழி தமிழ். ஆனால் சில ஆயிரம் பேர் மட்டுமே பேசக்கூடிய மொழி சமஸ்கிருதம்.‌ பார்ப்பனர்களுக்காக சமஸ்கிருத மொழி இந்தியாவில் திணிக்கப்பட்டு வருகிறது. புராணங்களை பாதுகாக்க சமஸ்கிருத மொழி வேண்டும் என்றே திணிக்கப்படுகிறது. இந்து மதம் பாகுபாடுகளை கொண்ட மதம். இந்தியை விடவும், சமஸ்கிருதம் தான் அவர்களுக்கு முக்கிய நோக்கம். ஜனநாயகத்தை உயர்த்தி பிடிக்க வேண்டும். தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகள் பேசுபவர்களை நாம் ஒருங்கிணைக்க வேண்டும்.

பா.ஜ.க., காங்கிரஸ் என இரு கட்சிகளும் ஒரே மொழி வேண்டும் என எண்ணி இந்தியை திணிக்க வேண்டும் என முயற்சி செய்து வருகின்றனர். காங்கிரஸ் இந்தி தேசம் என்று நிலையில் இருக்கிறது. ஆனால் பா.ஜ.க. இந்து தேசம் என்ற எண்ணம் கொண்டு செயல்பட்டு வருகிறது. இது மிகவும் ஆபத்தான ஒன்று. பா.ஜ.க.வின் முதன்மையான நோக்கம் இந்தி இல்லை சமஸ்கிருத மொழி தான் அதற்கு முதலில் இந்தி திணிக்க வேண்டும். தமிழக ஆளுநர் டார்வின் கொள்கையை பேச கூடாது. ஆபிரகாம் லிங்கன் கருத்தை பேச கூடாது என ஆளுநர் பேசுவது ஏதோ சாதாரணமாக தானே பேசுகிறார் என எண்ணக் கூடாது" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com