செய்தியாளர்: ரா.மணிகண்டன்
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முஜிப்பர் என்பவர் சித்தோட்டில் உள்ள தனியார் மாலில் நடைபெற்ற நடனம் மற்றும் மாடலிங் நிகழ்ச்சிக்கு கோவையை சேர்ந்த இரு இளம் பெண்களை அழைத்துள்ளார். இதனையடுத்து நேற்று இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த கோவையை சேர்ந்த இரு இளம் பெண்களும் இரவு நிகழ்ச்சி முடிந்து முஜிப்பிரின் நண்பர் கலைச்செல்வன் வீட்டில் தங்கியுள்ளனர்.
பின்னர் அதிகாலை சுமார் நான்கு மணிக்கு கலைச்செல்வன் தனது காரில் இரு இளம் பெண்களையும் கோவைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது வில்லரசம்பட்டி நால்ரோடு பகுதியில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார், ஓட்டுநர் கலைச்செல்வனின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கம்பத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் இரு இளம் பெண்களுக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காயமடைந்த கலைச்செல்வன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து வடக்கு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் மற்றொரு விபத்து நிகழ்ந்துள்ளது. மாம்பட்டு கிராமம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் சாலை ஓரத்தில் வேப்ப மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த சேத்துப்பட்டு பெரவளூர் கிராமத்தை சேர்ந்த சாந்தா 60 வயது பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 2 பேர் பலத்த காயமடைந்து வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.