ஈரோட்டில் தீர்த்தம் எடுத்துச்சென்ற பக்தர்கள் கூட்டத்தில், அதிவேகமாக வந்த கார் புகுந்து மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் அவல் பூந்துறை அருகே கொலங்காட்டு வலசு பகுதியில் உள்ளது புகழ்பெற்ற மாகாளியம்மன் கோயில். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவிற்கு, கொளங்காட்டு வலசு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொள்வர். ஆனால், கடந்த ஆண்டு கொரோனோ நோய் பரவல் காரணமாக கோலாகலமாக நடைபெற வேண்டிய திருவிழா மிக எளிமையாக நடைபெற்றது.
இந்த நிலையில், இந்த ஆண்டு மிகச் சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டு, திருவிழா நடக்க தேவையான ஏற்பாடுகளை செய்துவந்தனர். இதைடுத்து, திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பக்தர்கள் தீர்த்தம் எடுத்துக் கொண்டு திரும்பினர். அப்போது ஈரோட்டில் இருந்து அரச்சலூர் நோக்கி அதிவேகமாக வந்த ஹோண்டா கார் தீர்த்தம் எடுத்து வந்த கூட்டத்தின் நடுவே புகுந்து விபத்து ஏற்பட்டது.
இதில் தீர்த்தம் எடுத்து வந்த ஆறுமுகம், கண்ணாயம்மாள், பழனிசாமி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5-க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து தகவல் அறிந்து வந்த அரச்சலூர் காவல்துறையினர் காயம் ஏற்பட்டவர்களை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, அதிவேகமாக வந்த கார் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.